திருமங்கலம் மோதல்: 60 திமுக, அதிமுகவினர் மீது வழக்கு
மதுரை: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 60 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
திருமங்கலம் இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக திமுகவினருக்குத் தகவல் கிடைத்தது.
கீழ உரப்பனூர் இந்திரா நகர், நெடுங்குளம், சந்தைப்பேட்டை, கொக்குளம், ஆலம்பட்டி, உலகானி ஆகிய 4 இடங்களில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாக தகவல் பரவியது.
இதையடுத்து அங்கு திமுகவினர் விரைந்து சென்றனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினர். மேலும், அதிமுகவைச் சேர்ந்த 14 பேரை திமுகவினர் பிடித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
அப்போது ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த இடமே போர்க்களம் போல மாறியது.
பிடிக்கப்பட்ட 14 அதிமுகவினரையும் திருமங்கலம் போலீஸில் திமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.
இந்த நிலையில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், அதிமுகவினர் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். திமுகவினர்தான் பணம் கொடுப்பதாகவும், அதிமுகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொகுதியின் பல இடங்களில் மோதல் நடந்துள்ளது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கார்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.
இரு தரப்பு சார்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
9ம் தேதி பொது விடுமுறை:
இதற்கிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications