உங்கள் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்திருந்தால்.. எப்படி முறையிட்டு சரி செய்யலாம்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் 2022ம் ஆண்டு புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முன்பு இருந்தவர் மின்சார மீட்டர் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு மின் கட்டணம் மிக அதிகமாகவே வந்துள்ளது. அதனாலேயே அவர் வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டார். இந்த விவரம் தெரியாமல் குடிபோன எனக்கு குடிவந்த முதல் மாதமே 8500 மின் கட்டணம் வந்தது. வழக்கமாக முந்தைய வீட்டில் 500 தான் வரும். 8500 என்று வந்தது எப்படி என்று விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. அப்போது நான் என்ன செய்து மின் கட்டணத்தை பூஜியமாக்கினேனோ, அதே முடிவினை தான் இப்போது மக்களும் மேற்கொள்ள வேணடும். அந்த வகையில் உங்கள் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்திருந்தால் எப்படி முறையிட்டு சரி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பாருங்கள்.
இன்றைக்கு பலருக்கும் மின் கட்டணம் மிக அதிகமாக வந்துள்ளதாக புலம்புவதை காண முடிகிறது. மின் கட்டணம் இப்போது மட்டுமே அதிகமாக வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பல ஆண்டுகளாகவே மின் கட்டணம் இப்படித்தான் சிலருக்கு அதிகமாகவே வரும். ஏன் மின் கட்டணம் அதிகமாக வருகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

மின் கட்டணம் கணக்கீடு என்பது ஒவ்வொரு 60 நாட்களுக்கு ஒரு முறை தான் நடக்கும். சில நேரங்களில் 62 நாட்கள் அல்லது 64 நாட்களில் கூட நடைபெறுவது உண்டு. விடுமுறை மற்றும் பணி அதிகம் போன்ற காரணங்களால் ஓரிரு நாள் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி வீடுகளுக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்ய கணக்கீட்டார்கள் வரும் போது, வீடு பூட்டியிருந்தால், அவர்கள் கடந்த ஆண்டு, இதே காலக்கட்டத்தில் எவ்வளவு மின் கட்டணம் வந்தது, கடந்த மாதம் எவ்வளவு வந்தது என்பதை தோராயமாக கணக்கிட்டு அந்த கட்டணத்தை மின் கட்டணமாக விதித்துவிடும் வாய்ப்பு அதிகம். அப்படித்தான் மின் கட்டணம் பொதுவாக அதிகமாக வரும்.
இரண்டாவது சிக்கல் நான் பாதிக்கப்பட்ட வகை. மின்சார மீட்டரில் பிரச்சனை இருக்கும். அப்படி இருந்தாலும் மின் கட்டணம் மிக அதிகமாக வரும். உங்களுக்கு முன்பு வாடகைக்கு வீட்டில் குடியேறிவர் 8500 ரூபாய் கட்டியிருந்தால் அதே கட்டணம் உங்களுக்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் கடந்த மாதம் வீட்டில் யாருமே இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் மின் கட்டணத்தை விதித்துவிடுவது அதிகமாக நடக்கிறது. சில வீடுகளில் மின்சார மீட்டர் மற்றும் வயரிங் பிரச்சனை காரணமாகவும் மின் கட்டணம் அதிகமாக வரும்.
விஷயத்திற்கு வருவோம், இதில் எந்த வகையில் மின் கட்டணம் அதிகமாக வந்தாலும், பயப்பட தேவையில்லை.. நேரடியாக நீங்கள் மின்சார பில் கட்டும் இடத்திற்கு செல்லுங்கள், உங்கள் வீட்டின் உரிமையாளர் தான் மின் கட்டணம் அதிகமாக வந்தது குறித்து கடிதம் எழுதி தர வேண்டும். என் விஷயத்தை பொறுத்தவரை புதிதாக இப்போது தான் வீட்டிற்கு குடிவந்துள்ளேன். யாருமே இல்லாத வீட்டிற்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று மின்வாரிய அதிகாரியை பார்த்து கடிதம் தந்தேன்.
அத்துடன் உரிமையாளரும் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது பற்றி கடிதம் எழுதி தந்தார். இரண்டு கடிதத்துடன் சென்று முறையிட்டேன். அப்போது ஏஐ முறையீட்டை ஏற்றுக்கொண்டார். சில நாட்கள் விசாரணை நடத்தி, மின் கடடணத்தை பூஜியம் ஆக்கினார். அவரிடம் இன்னொரு கோரிக்கையும் வைத்தேன். அதாவது மின்சார மீட்டர் பிரச்சனை உள்ளதை சுட்டிக்காட்டினேன். முதலில் அவர் மின்சார மீட்டர் வர தாமதம் ஆகும் என்று கூறினார். உடனே நான் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் நிலைமையை கூறினேன். அவர் நிலைமையை புரிந்து கொண்டு உடனே மின்சார மீட்டரை மாற்றிதர உத்தரவிட்டார். இதன்படி மின்சார மீட்டர் மாற்றப்பட்ட பிறகு அங்கு மின் கட்டணம் இயல்பான அளவிலேயே வந்தது.
சரி, இன்னொரு பிரச்சனை பற்றியும் பார்ப்போம். ஒருவேளை உங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் மின்சாரம் கணக்கீடு செய்ய வந்த நாளில் வெளியூர் போய்விட்டீர்கள், அப்போது வந்து பார்த்து ஆள் இல்லை என்று அதிக கட்டணம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை சுட்டிக்காட்டுங்கள். முடிந்த வரை அடுத்த ஓரிரு நாளிலேய முறையிட்டால், அவர்கள் விசாரணை நடத்துவார்கள். கடந்த மாதம் கணக்கீடு எடுத்த போது இருந்ததைவிட மிகமிக அதிகமாக இருப்பது உறுதி என்றால், கண்டிப்பாக மாற்றித்தர வாய்ப்பு உள்ளது.
அதாவது அடுத்த மாதத்தில் கழித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. நீங்கள் முறையிடாமல் விட்டால், நீங்கள் கட்டணத்தை முழுமையாக கட்ட வேண்டிய நிலையே வரும். சோஷியல் மீடியாவில் புலம்புவது, ஊடகங்களில் புகார் அளிப்பதைவிட, உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து நடந்த தவறை விளக்கி புகார் அளித்து நிவாரணம் பெறலாம்.


Click it and Unblock the Notifications
