வங்கதேசத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்
டாக்கா: அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசத்தில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.
சர்வாதிகாரிகள் கையில் சிக்கி சீர்குலைந்த வங்கதேசம் அதிலிருந்து மீண்டு விட்ட போதிலும், இப்போது தீவிரவாதிகளின் வேட்டைக் காடாக மெல்ல மெல்ல மாறி வருகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேர்தலின்போது கடைசி நேரத்தில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வங்கதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் மீண்டும் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக இப்போது தேர்தல் நடந்துள்ளது.
வாக்களிக்க மக்கள் ஆர்வம்
இன்று காலை தொடங்கிய வாக்குப் பதிவின்போது மிக மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்தபோதிலும், மக்கள் அதைப் புறக்கணித்து விட்டு வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர்.
ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பினரால் நாச வேலைகள் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக வெளியானத் தகவலைத் தொடர்ந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான பேரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இன்று மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பல இடங்களில் ஆள் மாறாட்டம், கள்ள ஓட்டு தொடர்பாக மோதல்கள் நடந்தன. தென் மேற்கு வங்கதேசத்தில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.
கடந்த தேர்தலைப் போல கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது என இடைக்கால நிர்வாகத்தின் தலைவரான பக்ருதீன் அகமது கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம், ஆட்சி முறையாக ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கலீதா ஜியா - ஹசீனா
இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான இரு வேட்பாளர்கள் முன்னாள் பிரதமர்களான கலீதா ஜியாவும், ஷேக் ஹசீனாவும்தான். இருவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள், வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.
எனவே இந்தத் தேர்தலால் வங்கதேச மக்களுக்கு எந்த வகையிலும் விமோச்சனம் பிறந்து விடாது என்ற கருத்தும் நாட்டில் நிலவுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த இரு பெண் தலைவர்களும்தான் வங்கதேசத்தை ஆண்டுள்ளனர்.
1991ல் சர்வாதிகாரி எர்ஷாத் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டவுடன் நடந்த தேர்தலில் கலீதா ஜியா பிரதமரானார். அதையடுத்து 1996ல் நடந்த தேர்தலில் ஹசீனா பிரதமரானார். பின்னர் 2001ல் மீண்டும் ஜியா பிரதமரானார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜியா அல்லது ஹசீனா ஆகியோரில் யார் பிரதமராக வருகிறார்களோ, மற்றவரின் கட்சி ஆட்சியை, சுதந்திரமாக நடத்த விடாமல் போராட்டங்கள், தர்ணாக்கள், வன்முறைகள் என நடத்தியதே.
இந்த இருவர் மீதும் கடந்த ஆண்டு பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதிருப்தியில் மக்கள்:
வங்கதேசத்தை எந்த வகையிலும் இவர்கள் மேம்படுத்த உதவவில்லை என்ற பொதுவான அதிருப்தி அந்நாட்டு மக்களிடையே உள்ளது.
ஊழல், தவறான நிர்வாகம், வன்முறை ஆகியவைதான் இந்த இரு தலைவர்களின் ஆட்சியிலும் கண்டது என்ற அதிருப்தியும் மக்களிடையே உள்ளது.
இப்படி பல்வேறு வகையில் அதிருப்தி நிலவினாலும் கூட வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தது அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு மகழ்ச்சி அளித்துள்ளது. இந்த முறை பெருமளவிலான வாக்குகள் பதிவாகும் என அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று மாலையே வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரவு 7 மணி முதல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும்.












Click it and Unblock the Notifications