அதிமுக பட்டுவாடா பணம் பறிப்பு-திமுக எம்எல்ஏக்கள் சிறைபிடிப்பு
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த அதிமுகவினரிடமிருந்து பணத்தை திமுகவினர் பறித்துச் சென்றனர். இதையடுத்து இரு திமுக எம்எல்ஏக்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர். இதையடுத்து மக்களுக்கு ரூ. 1.25 லட்சம் பணத்தைக் கொடுத்து எம்எல்ஏக்களை திமுக மீட்டது.
திருமங்கலம் அருகே உள்ள புங்கங்குளத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு பண பட்டுவாடா செய்யச் சென்றனர். அவர்களை திமுகவினர் தடுத்து பணத்தை பறி்த்துச் சென்றனர்.
இதனால் அதிமுகவினர் அங்கு பண பட்டுவாடா செய்ய முடியவில்லை.
இந் நிலையில் திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ கு.பி்ச்சாண்டி, செஞ்சி திமுக எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய இந்த கிராமத்துக்கு திமுகவினருடன் சென்றனர்.
அப்போது அவர்களை கிராம மக்கள் வழிமறித்து அதிமுகவினரிடமிருந்து பறித்துச் சென்ற ரூ. 1.25 லட்சத்தை திரும்பத் தருமாறு கேட்டனர். அப்போது திமுகவினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு எம்எல்ஏக்களையும் கார்களுடன் சிறை பிடித்த கிராம மக்கள், திமுகவினரை விரட்டியடித்தனர்.
தகவல் அறிந்த மதுரை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜ் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து கிராம மக்களிடம் சமரசம் பேசினார். பின்னர் ரூ. 1.25 லட்சம் பணத்தைத் தந்து இரு எம்எல்ஏக்களையும் திமுகவினர் மீட்டுச் சென்றனர்.
எம்எல்ஏக்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு:
இதற்கிடையே, அருந்ததி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வலசை ரவிச்சந்திரன் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் தனி உள் இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திருமங்கலம் இடைத் தேர்தலில் அருந்ததி மக்கள் கட்சி, திமுகவுக்கு தனது முழு ஆதரவை அளிக்கிறது.
எனது தலைமையில் 18 பேர் கொண்ட குழு திருமங்கலத்தில் திமுகவுக்காக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications