தீவிரவாதி கஸாப் கிராமத்தில் எப்.பி.ஐ. விசாரணை

புதன்கிழமை இரவு எப்.பி.ஐ குழுவினர் பரீத்கோட் சென்றனர். அங்கு கஸாப் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே கஸாப்பிடம் எப்.பி.ஐ குழுவினர் பல மணி நேரம் தொடர் விசாரணை நடத்தி அவன் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
தெற்காசிய பிரிவுக்கான இயக்குநர் வில்லியம் ராபர்ட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட எப்.பி.ஐ குழு பரீத்கோட் சென்றதாக பாகிஸ்தானின் ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
கஸாப் குறித்து அவன் மூலம் திரட்டிய தகவல்களை சரி பார்க்கவும், கஸாப் குறித்த மேலும் விவரங்களை அறியவுமே எப்.பி.ஐ குழு வந்ததாக தெரிகிறது.
சமீபத்தில்தான் கஸாப்பின் தந்தையான அமீன், கஸாப் எனது மகன்தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். மேலும் பரீத்கோட் கிராமத்தினரும், கஸாப் தங்களது ஊரைச் சேர்ந்தவன்தான் என்றும் கூறியிருந்தனர். ஆனால் கஸாப் பாகிஸ்தானி அல்ல என்பது பாகிஸ்தான் அரசின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எப்.பி.ஐ குழுவினர் பரீத்கோட்டில் விசாரணை மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மன்மோகன், சர்தாரியுடன் புஷ் பேச்சு:
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என இரு தலைவர்களிடமும் புஷ் கேட்டுக் கொண்டார்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் இந்தியாவுடன் ஒத்துழைக்குமாறு சர்தாரியை புஷ் கேட்டுக் கொண்டார்.
டெக்சாஸ் மாகாணம் கிராபோர்ட்டில் உள்ள தனது பண்ணை வீட்டிலிருந்து புஷ், இரு தலைவர்களிடமும் பேசினார். அப்போது தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications