பாகிஸ்தான்: சரப்ஜித் மரண தண்டனை ரத்தாகிறது
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக கூறி கைது செய்யபப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் தண்டனையைக் குறைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
லாகூரின் கோட்லோக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சரப்ஜித் சிங். பைசலாபாத் மற்றும் முல்தான் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்திய உளவாளி என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கடந்த முஷாரப் ஆட்சியில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய சர்தாரி அரசில், மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையும், ஆயுள்த தண்டையாக குறைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நயீக், உள்துறை அமைச்சகத்திற்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.
சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்றப் போராடிய ஒரே பாகிஸ்தான் தலைவர் முன்னாள் மனித உரிமைத்துறை அமைச்சர் அன்சார் பர்னிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்ட அமைச்சகம், சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையைக் குறைப்பது தொடர்பான குறிபபை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. சரப்ஜித் சிங் தவிர மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் கூட அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படவுள்ளது.
இந்த குறிப்பை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டால் உடனடியாக அனைவரின் மரண தண்டனையும் ரத்தாகி, ஆயுள் தண்டனையாக மாறி விடும் என்றார்.












Click it and Unblock the Notifications