ஜெ. ஜெயித்தது 'அந்த மிஷினை' வைத்து தானா?-கருணாநிதி

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து அங்குள்ள தேவர் சிலையருகே நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
இரண்டு, மூன்று நாட்களாக பத்திரிகைகளை பார்க்கும்போது எனக்கு பெரும் வருத்தம், வேதனை. நம்மோடு இவர்கள் இருந்தபோது எவ்வளவு விவரம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக எந்த அளவுக்கு குரல் கொடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் இப்போது என்ன ஆகிவிட்டார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் போது ஏற்படுகின்ற வருத்தத்தை தான் நான் சொல்கிறேன்.
1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் அரசு அமைந்த போது மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக சேலம் உருக்காலை திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எழுச்சி நாள் கூட்டத்தை கூட்டினோம். அதில் என்னோடு இருந்தவர்கள், எங்களை விட அதிகமாக சேது சமுத்திர திட்டத்தை பேசியவர்கள் இன்று சேது சமுத்திர திட்டத்தை இப்போது மறந்து விட்டார்கள்.
மறந்தால் கூட பரவாயில்லை. எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிற அம்மையாரோடு கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தல் யார் யாரையெல்லாம், எப்படியெல்லாம் அடையாளம் காட்டியிருக்கிறது.
இந்த திருமங்கலத்தில்தான் பொடா சட்டம் அதிகார துஷ்பிரயோகம் செய்து பயன்படுத்தப்பட்டது. பொடாவுக்கு எதிராக, முரணாக பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தத் தொகுதியில் மதிமுக எம்எல்ஏவாக இருந்த வீர இளவரசுவும் கூட.
அப்போது அந்த கட்சியைச் சேர்ந்த தளகத்தர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் என்னிடம் வந்து மதிமுக தலைவரை விடுதலை செய்ய லட்சக்கணக்கான கையெழுத்துக்களை பெற இருக்கிறோம். அதில் முதல் கையெழுத்து நீங்கள் போட வேண்டும் என்றனர். அதாவது கோபால்சாமியை, மன்னிக்க வேண்டும், கோபால்சாமி என்றால் அவருக்கு கோபம் வரும். வைகோவை விடுதலை செய்ய முதல் கையெழுத்து என்னிடம் கேட்டார்கள்.
எதற்கு முதல் கையெழுத்து, திமுகவைப் பிளந்து கொண்டு வேறு ஒரு கட்சி மதிமுகவை தொடங்கிய நண்பர்கள் ஜெயலலிதா ஆட்சியிலே பொடா சட்டத்தில் சிறையிலே அடைக்கப்பட, அந்த சூழ்நிலையில், சூனியக்காரி என்னை சிறையிலே போட்டுவிட்டாள், சூழ்ச்சிக்காரி என்னை காராகிரகத்திலே போட்டு விட்டாள், என்றெல்லாம் எனக்கே எழுதத் தெரியாத வீர வசனத்தை பேசி விட்டு சிறையிலே இருந்தவர்களை விடுவிக்க முதல் கையெழுத்து போட்டது இந்த மு.கருணாநிதிதான்.
பூந்தமல்லி நீதிமன்றத்திலே ஓராண்டுக்கு பிறகு விசாரணைக்கு அழைத்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்ட நேரத்தில், சிறையில் பார்வையிட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நீதிமன்றத்துக்கு வரும் போது முகத்தை பார்த்து விட்டு வரலாம் என்று நீதிமன்றத்துக்கு சென்று வெயிலில் காய்ந்து, காத்திருந்து, சந்தித்து ஜாமீனில் வெளிவந்து விடுங்கள் என்று மிக மிக உருக்கத்தோடு கேட்டு, அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நான் தனிப்பட்ட சில நண்பர்களிடம் காட்டிய அன்பின் அடையாளம்.
என்னுடைய கொள்கையை யார் தாங்கியிருக்கிறார்களோ, அந்த கொள்கைக்காக யார் வேதனைப்படுகிறார்களோ, அந்த வேதனையிலே எனக்கும் பங்கு உண்டு என்ற முறையிலே அன்றைக்கு நான் செய்த செயல்.
தேர்தல் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?
ஓட்டுகளை மாற்றிப்போடுகிற மிஷினை கண்டுபிடித்திருக்கிறார்கள், இலைக்கு போட்டால் அது உதயசூரியனுக்கு வருவது போல ஒரு புதிய தகவலை பழைய முதல்வர் ஜெயலலிதா இங்கு தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவு அவர்களுக்கு தெரிந்து விட்டது போலும்.
ஆகவே இப்படி ஒரு பொய்யை சொல்கிறார்கள் என்று எண்ணினேன். இப்போது அந்த பொய்யை வைகோவும் சொல்லியிருக்கிறார். பி.எச். பாண்டியனும் சொல்லியிருக்கிறார். அவர் ஒரு படி மேலேயே போய் கேவலமாக சொல்லியிருக்கிறார். வாக்குகளை பிராடு செய்ய இந்த கட்சியிலே பணியாற்றுகிறவர்கள், தேர்தல் பணிக் குழுவிலே இருப்பவர்கள், தேர்தலை நடத்துகிறவர்கள், நாங்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவியோடு, காவல்துறை உதவியோடு, வாக்களிக்கின்ற பெட்டியிலே இருக்கின்ற ஓட்டுக்களை தங்களுக்கு மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்று இன்றைக்கு தெரிவித்திருக்கிறார்.
நான் கேட்கிறேன், இப்படி ஒரு வித்தை இருப்பது தெரிந்தால் இடைக்காலத்தில் இரண்டு, மூன்று முறை தோற்றோமே, ஆட்சியை பறிகொடுத்தோமே, அப்போதே அந்த காரியத்தை செய்திருக்கலாமே. அப்படியானால் சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக வந்ததற்கு காரணம், அப்போது இந்த முறையை அவர் செய்தாரா?.
எவ்வளவு விபரீதமான, வேடிக்கையான, கேட்பதற்கே வெட்கக் கேடான ஒரு விவகாரத்தை இன்றைக்கு அவர்கள் விதைத்திருக்கிறார்கள் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றைக்கு கூட ஒரு போராட்டம் நடத்தி 10 ஆயிரம் பேர் சிறைக்கு சென்று மாலையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் காலையில் கைது செய்து, மாலையில் விட்டு விடுகிறோம். அதனால்தான் அதிக போராட்டங்கள் நடக்கிறது.
வருகின்ற விருந்தினர்களை உடனே விட்டு விடலாமா, நான்கைந்து நாட்களுக்கு வைத்து கொள்ள வேண்டாமா என்று கூட எனக்கு கவலை உண்டு. முடிந்தால் பிறகு பார்க்கலாம்.
மார்க்சிஸ்ட் நண்பர்கள் பட்டாக்கள் கொடுக்கவில்லை என்பதற்காக மறியல் போராட்டம் நடத்தினார்கள். பேரணி நடத்தியோ, கோஷங்கள் போட்டாலோ என் காதில் விழும். மறியல் நடத்தினால்தான் எனக்கு புரியும் என்று நினைத்து விட்டார்கள். இந்த அரசு ஏழை எளியவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகின்ற திட்டத்தின்படி 15.12.2008 வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 39 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இதனால் பயன் அடைந்தவர்கள் 1,74,853 பேர். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 40,951. பழங்குடியினர் 3,255. மிகவும் பிற்பட்டோர் 56,545, பிற்பட்டோர் 65,450, மற்றவர்கள் 8,652 பேர்.
நம்முடைய ஆட்சியில் ஒரு சிறு தவறு அறிந்தோ, அறியாமலோ நடந்து விட்டால், அதை பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கிறார்களே. நாம் என்ன மறந்து விட்டோமா, மேற்கு வங்கத்திலே நடந்த போராட்டத்தை மறந்து விட்டோமா, கூட்டணி கட்சி என்கிற முறையில் நாகரீக பண்பாடுகள் எங்களால் கடைபிடிக்கப்பட்டது உண்டு. ஆனால் நந்திகிராமத்தில் என்ன நடந்தது. டாடாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய விவசாயிகளை கட்டுப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆட்சி, அதைப்பற்றி காங்கிரஸ்காரர்கள் எல்லாம் கூட பேசினார்கள். ஆனால் அதைப்பற்றி பேசாமலேயே மெளனமாக இருப்பது திமுக தலைவர்தான் என்று கூட்டணிக்கு நாம் தந்த மதிப்பை, நாம் தந்த ஒத்துழைப்பை அந்த பண்பாட்டை நீங்கள் கடைபிடிக்க வேண்டாமா?
அதற்காக நடக்கிற தவறுகளை எல்லாம் ஒப்புக்கொள்ளுங்கள் என்று நான் கெஞ்சவில்லை. இதையெல்லாம் மக்களிடம் சொல்லாதீர்கள் என்று நான் குறுக்கே நிற்கவில்லை. அதைப்பற்றி சொல்லும்போது ஒரு நாகரீகம் வேண்டும். பண்பாடு வேண்டும். அந்த பண்பாட்டை கூட்டணி தர்மத்தின்படி கடைபிடிக்க வேண்டும்.
இந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று எண்ணுகின்ற நண்பர்கள் எண்ணம் பலிக்காமல், நாங்கள் தொடர்ந்து மக்களுடைய ஆதரவை பெற்றுக்கொண்டே இருக்கிற காரணத்தால், அந்த ஆதரவுக்கு குறுக்கே ஏதாவது செய்ய வேண்டும் என்று இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எந்த அளவுக்கு போய் விட்டார்கள் என்றால், தேர்தல் கமிஷனே எங்களோடு ஒத்துழைப்பது போலவும், எங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பது போலவும் சொல்கிற அளவுக்கு வந்து விட்டார்களே.
காரணம் 9ம் தேதிக்கு பின்னர் வரப்போகின்ற தேர்தல் முடிவு அவர்களை இப்போதே அச்சுறுத்த ஆரம்பித்து விட்டது. எனவே முன்கூட்டியே காரணம் சொல்லி தப்பித்து விடுவோம் என்று அவர்கள் தயாராகி விட்டார்கள். அது எனக்கு நன்றாக தெரிகிறது. அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லோரும் சொன்னீர்கள், அழகிரியும், ஸ்டாலினும் ஒன்றாக இந்த தேர்தலை நடத்துகின்ற காரணத்தால் வெற்றி நிச்சயம் என்று சொன்னீர்கள், அழகிரியும், ஸ்டாலினும் மாத்திரம் அல்ல. எல்லா கிரியும், எல்லா ஸ்டாலினும். தோழமை கட்சியில் இருக்கின்ற எல்லா நண்பர்களும். ஒன்றுபட்டு, ஒத்துழைத்து, நட்புக்கு பங்கம் இல்லாமல் நம்முடைய கொள்கை வென்றிட கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
அந்த ஒரே நோக்கத்தோடு எல்லோரும் இந்த அணியிலே அயராமல் தொண்டாற்ற வேண்டும். அதற்கு அழகிரியும், ஸ்டாலினும் எடுத்துக்காட்டாக பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களோடு என்னுடைய பேரன் தயாநிதி மாறனையும், அவரையும் சேர்த்துக்கொள்கிறேன்.
வெற்றி நம் பக்கம்தான். வெற்றிக்காற்று நம் பக்கம் தான் வீசும். சோனியா காந்தி வழிகாட்டுதலோடு நடைபெறும் ஆட்சியில் நமக்கு வழங்குகின்ற திட்டங்களும், நமக்கு வழங்குகின்ற உதவிகளும், ஒத்துழைப்புக்கு நாம் காட்டுகின்ற நன்றி, இந்திய ஒருமைப்பாடு, இந்திய இறையாண்மை, அதை காப்போம்.
அந்த வகையிலே ஒன்றுபட்டு உழைப்போம். இதுவே இந்த தேர்தல் பிரசாரத்தினுடைய பிரகடனம் என்றார் கருணாநிதி.
இதில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், எம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எல்லாளன், அழகிரி ஆகியோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications