சத்யத்தை வாங்கும் திட்டமில்லை-நாராயணமூர்த்தி
பெங்களூர்: ஊழல் கறை படிந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை இன்போசிஸ் நிறுவனம் கையகப்படுத்தாது என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜுவின் அதி பயங்கர மெகா ஊழலால் இந்திய தொழில்துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 53,000 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸை கையகப்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்போசிஸ் நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸை கையகப்படுத்தாது என நாராயணமூர்த்தி கூறி விட்டார்.
அவர் கூறுகையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சத்யத்துக்கு வந்துள்ள இந்த நிலை எனக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. நிர்வாகக் குளறுபடிக்கு மிகச் சரியான உதாரணம் சத்யத்தின் இன்றைய நிலைதான்.
ஆனால் இந்த ஒரு நிறுவனத்தைப் பார்த்து ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களையும் எடைபோடக் கூடாது. சர்வதேச நிறுவனங்கள். நல்ல நேர்மையான நிறுவனங்கள் இந்தியாவில் நிறையவே உள்ளன என்பதை மதிப்புக்குரிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
மற்றபடி சத்யம் நிறுவனத்தில் இதுவரை நிகழ்ந்துள்ளவை வருத்தம் தருபவை. முதலீட்டாளர்கள் இனி நன்கு ஆராய்ந்த பிறகே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் சத்யம் சரிவு.
இந் நிலை மாறும். இந்த நேரத்தில் இந்திய நிறுவனங்கள் அனைவருமே, தங்கள் நேர்மையையும், சட்டப் பூர்வ செயல்பாடுகளையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், என்றார் நாராயணமூர்த்தி.
அதேபோல சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும் கூறியுள்ளார்.
டாடா கன்ஸல்டன்ஸி, விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன.
சத்யம் ஊழியர்களைக் காப்பாற்றும் வகையில் உடனடி நடவடிக்கைதான் இப்பேது அவசியம் என விப்ரோவின் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்களின் நேர்மையை பணயமாக வைத்து இந்த விளையாட்டை நடத்தியுள்ளார் ராஜு என டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த சரிவிலிருந்து மீள வெகு காலமாகும் என கவலை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications