குடியரசு தினம்-குழந்தைகள் யானை சவாரி ரத்து
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பின்போது தீரச் செயலுக்கான விருது பெற்ற குழந்தைகளை யானை மீது அமர வைத்து அழைத்து வரும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் குழந்தைகளுக்கான யானை சவாரியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
தீரச் செயல் புரியும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வீர விருது அளித்து கெளரவிக்கிறது. இந்த விருது பெற்ற குழந்தைகள் குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பின்போது யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.
ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி இந்த யானை சவாரியை ரத்து செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.
இதுகுறி்த்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின்போது யானை சவாரி இடம் பெறாது.
அதற்குப் பதிலாக பரம் வீர் சக்ரா விருது பெறுவோர் அழைத்துச் செல்லப்படுவது போல, மாருதி ஜிப்சி வண்டிகளில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவர்.
ஒவ்வொரு ஜிப்சியிலும் 3 அல்லது நான்கு குழந்தைகள் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 20 குழந்தைகள் வீர தீர செயலுக்கான விருதினைப் பெறுகிறார்கள். தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுவன் மருதுபாண்டியனும் அவர்களில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
