பொங்கல் பண்டிகை - உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

Pongal celebration in School
சென்னை: உலகத் தமிழர்கள் அனைவரும் நேற்று பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். இருப்பினும் சில நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் துயரத்தை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை.

தமிழகத்தில் ..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு முதல் தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்பட்டதால் இரட்டிப்பு சந்தோஷத்துடன் உற்சாக கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.

காலையிலேயே புத்தாடை அணிந்து, புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து குடும்பத்துடன் மக்கள் பொங்கலை கொண்டாடினர்.

பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கலிடும் நிகழ்ச்சிகளும் நடந்தன. கிராமங்களில் மொத்தமாக பொது இடத்தில் பொங்கல் சமைத்து கொண்டாடப்பட்டது.

லாரி ஸ்டிரைக் கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால் கரும்பு வரத்து சிக்கலின்றி அமைந்தது. இதனால் கடைசி நேரத்தில் கரும்பு விலை சற்று குறைந்து மக்களின் கொண்டாட்டத்தை இனிமையாக்கியது.

ஈழத் தமிழர்கள் புறக்கணிப்பு ..

அதேசமயம், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டு வருவதால் துயரமடைந்துள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் ஈழத் தமிழர்கள், இந்தப் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்தன். அதன்படி பல நாடுகளில் பொங்கல் கொண்டாட்டம் இல்லை.

அதேபோல, தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களிலும் உற்சாகக் கொண்டாட்டம் இடம் பெறவில்லை. அமைதியான முறையில் அவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு ..

மதுரை அவனியாபுரத்தில், பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன.

பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும் 20 க்கும் மேற்பட்டோர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர்.

இங்கிலாந்து மாணவிகள் பொங்கல் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் குலவையிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

கோவில்பட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் பல்கலை கழகத்தில் இளைஞர் மற்றும் சமூக பணிதுறையில் பயிலும் கல்லூரி மாணவர் கிரிஷ், மாணவியர்கள் சீமா, செஷ்பிரீத், லியோனி, தில்ஷானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் கலாச்சார பகிர்வு, மேம்பாட்டு கல்வியை வலியுறுத்தும் விதமாக பொங்கல் வைத்து விழா கொண்டாடினர்.

தமிழக பாரம்பரிய முறையில் நடைபெறும் பொங்கல் விழா தங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

நெல்லை மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கலையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்று காணும் பொங்கல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு, பணதீர்த்தம், அகஸ்தியர் அருவி, குற்றாலம், ஐந்தருவி, குண்டாறு நீர்த்தேக்கம், தலையாணை ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் ஆட்டோ, கார், டூவிலர், பேரூந்துகள் மூலம் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மேற்கண்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் விடுமுறையை கழிக்க வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டும் இப்பகுதிக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு மலைப்பகுதிகளுக்குள் பாலீதீன் பைகள், மதுபாட்டில்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பொதுமக்கள் கொண்டுவந்தால் அவைகளை வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

வனப்பகுதியில் வனத்துறையினரு்ம், காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து இப்பகுதிகளுக்கு வரும் உல்லாச பயணிகளுக்காக சிறப்பு பேரூந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

இதேபோல இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கிராமங்கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீடுகளில் உள்ள மாடுகள் அனைத்தும் குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் புது வர்ணம் பூசப்பட்டு அவற்றுக்குக் காலையில் படையலிடப்பட்டது.

பொங்கல் வைத்து அவற்றை மாடுகளுக்கு உண்ணக் கொடுத்து, கடவுளை வணங்கி கிராமங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

பின்னர் மாடுகள் அனைத்தும் கிராமங்களை சுதந்திரமாக வலம் வந்தன.

பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

பாஞ்சாலங்குறி்ச்சியில் சமத்துவ பொங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கட்டபொம்மன் கோட்டை, தூத்துக்குடி முயல் தீவு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு பொங்கலையொட்டி செல்வது வழக்கம்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை மண்டல சுற்றுலா துறை சார்பில் இன்னிசை கச்சேரி, ஓயிலாட்டம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தது. பாஞ்சாலங்குறி்ச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக நடந்த சமத்துவ பொங்கல் விழாவை தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டி மற்றும் அவரது மனைவி மலர்விழி துவக்கி வைத்தனர்.

விழாவில் நெல்லை மண்டல சுற்றுலாதுறை அலுவலர் செல்லப்பா, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லதா கருணாநிதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி, கட்டபொம்மன் வாரிசு வீமராஜா, கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில துணை தலைவர் வாஞ்சை கோபால்சாமி, வீரசக்கதேவி ஆலயக்குழு செயலாளர் சண்முக மல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நெல்லை மாவட்டத்திலுள்ள ஒருசில அரசு அலுவலங்களிலும் இன்று காலை மகளிர் சுய உதவி குழுவினர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+