அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட மும்பை சாட்சி

பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு வந்த தீவிரவாதிகள், மும்பையின் கபே பரேட் பகுதியில், படகில் வந்து இறங்கியபோது அவர்களைப் பார்த்தவர் அனிதா உதயா.
தீவிரவாதிகளிடம் நீங்கள் யார் என்று அனிதா விசாரித்தபோது, அது உனக்குத் தேவையில்லாத வேலை என்று கூறி விட்டு தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் வந்துள்ளனர்.
இந்த வழக்கில் அனிதாவின் சாட்சியம் முக்கியமானது. இந்த நிலையில் அனிதா கடந்த வாரம் காணாமல் போய் விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் அதிகாலையில் தனது வீடு வந்து சேர்ந்தார்.
இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது உறவினர் வீட்டுக்குப் போயிருந்ததாக தெரிவித்தார்.
ஆனால் தன்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலை 5 மணியளவில் எனது மகாத்மா ஜோதிபா பூலே நகரில் உள்ள குடிசைப் பகுதிக்கு நான்கு அதிகாரிகள் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு இந்தி தெரிந்திருந்தது.
அவர்கள் தங்களுடன் வருமாறும், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தப் போகிறார்கள் என்றும் கூறினர். பின்னர் என்னை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் எனது கணவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரைப் பார்த்தவுடன், இரண்டு நாட்களில் வீடு திரும்பி விடலாம் என என்னிடம் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவமனையிலிருந்து என்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு என்னை அமர வைத்த பின்னர் என் தொடர்பான பல ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் காட்டினர். என்னுடன் லக்கேஜ் எதுவும் கொண்டு செல்லவில்லை.
பின்னர் சில நிமிடங்களுக்குப் பின்னர் என்னை விமானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கிட்டத்தட்ட 17 முதல் 18 மணி நேரம் வி்மான பயணம் இருந்தது. அப்போதுதான் என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவை அடைந்தவுடன் கார் மூலம் என்னை ஒரு ஹோட்டலுக்குக் கொண்டு சென்றனர். இரண்டு மணி நேரம் கழித்து என்னை ஒரு கட்டடத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு என்னிடம் மும்பைத் தாக்குதல் குறித்தும், தீவிரவாதிகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
விசாரணை நடத்தியவர்களில் ஒருவர் இந்தி தெரிந்தவர். அவர் என்னிடம் இந்தியில் கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்று பின்னர் மற்ற அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். விசாரணை 2-3 மணி நேரத்தில் முடிந்தது.
பின்னர் என்னை மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு விமானம் ஏறி மும்பை வந்து சேர்ந்தோம்.
மும்பை வந்து சேர்ந்ததும், இந்த விசாரணை குறித்து யாரிடமும் எதுவும் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியதால்தான், போலீஸாரிடம் நான் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட விவரத்தை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார் அனிதா.
அனிதாவின் இந்த பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள், மத்திய அரசின் அனுமதியுடன்தான் அனிதாவை அழைத்துச் சென்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
