அதிமுக கூட்டணி: வைகோ-தா.பா. விலக திருமா கோரிக்கை
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்பட தமிழ்மான உணர்வுள்ள அனைவரும் அதிமுக கட்சியிலிருந்தும் அந்தக் கூட்டணியில் இருந்தும் வெளியேற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
4வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் மிகச் சோர்வான நிலையிலும் இனறு நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி அவரது பிரதிநிதியாக ஆற்காடு வீராசாமியை அனுப்பி வைத்து உண்ணா விரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினார். அவர்களுக்கு நன்றி. அவர்களின் வேண்டுகோளை புறக்கணிக்கவில்லை.
உண்ணாவிரத பந்தலுக்கு பின்புறம் மாநில-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றி முடிவெடுப்பேன்.
இலங்கையில் 5 லட்சம் தமிழர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நிற்க வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும், திருமாவளவனும் போடும் நாடகம் என்று ஜெயலலிதா கூறுகிறார். அவர் தமிழர்களுக்கு விரோதமாக காழ்ப்புணர்ச்சியுடன் இதை கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு பயணம் பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போர் நிறுத்த முயற்சியில் ஈடுபடாமல் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறியிருக்கிறார். அத்துடன் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள நட்புறவு ஆழமாகவும் வலுவாகவும் உள்ளது என பூரிப்படைந்து இருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழ் உணர்வுக்கு எதிராகவே ஜெயலலிதா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழ் மான உணர்வுள்ள அனைவரும் அதிமுக கட்சியிலிருந்தும் அந்தக் கூட்டணியில் இருந்தும் வெளியேற வேண்டும்.
ஈழத் தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டுமானால் அதில் உண்மையான அக்கறை இருக்குமானால் காங்கிரசையும், அதிமுகவையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். வைகோவும், தா.பாண்டியனும் பரிவுடன் இதை பரிசீலிக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தவிர தமிழினம் அழிவது தவிர்க்க முடியாது. இது ஒரு குறைந்தபட்ச கோரிக்கைதான். இது ஒரு நெருக்கடியான நேரம். ஆகவே இந்த வேண்டுகோளை ஒரு அறை கூவலாக விடுக்கிறேன் என்றார்.
எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய கோரிக்கை:
முன்னதாக நேற்று அவர் மேடையில் பேசுகையில், பல கட்சிகள் இணைந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்ட முடிவு எடுக்க முடியாது என்பதால், நான் இந்த முடிவை எடுத்தேன். தோழமை கட்சி தலைவர்களை அவமதித்ததாகவும், புறக்கணித்துவிட்டதாகவும் தயவு செய்து கருத வேண்டாம். இந்த முடிவை எடுக்க நான் நினைத்தபோது, டாக்டர் ராமதாஸ், வீரமணி போன்ற தலைவர்கள் தடுத்தனர். இந்த நிலையை எடுத்ததற்கு முதல்வரும் வருத்தப்பட்டுள்ளார்.
இந்த முடிவை எடுத்ததற்காக, டாக்டர் ராமதாஸ், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எனக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை. ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துவதற்காக, இந்த முடிவை எடுத்தேன். இலங்கையில் போரை நிறுத்துவதற்கு என்னை வைத்து முதல்வர் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.
முதல்வர் கருணாநிதியும் கூட்டணி கட்சித் தலைவர்களும் இணைந்து ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தினோம். கொட்டும் மழையிலும் சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை மனித சங்கிலி நடத்தினோம்.
பின்னர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முதல்வர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து போரை நிறுத்தும்படி வலியுறுத்தினோம். இதனைத் தொடர்ந்து திமுகவின் தலைவராக 10வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பேசிய முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் விட தயாராக இருப்பதாக உருக்கமாகவும் கண்ணீர் மல்கவும் பேசினார்.
ஆறரை கோடி தமிழர்களின் முதல் குடிமகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்களின் தலைவர் என்ற முறையிலும் முதல்வர் கருணாநிதி எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும், இந்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இலங்கையிலே பல மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் அது பற்றி ஒரு வார்த்தை கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட இந்திய அரசை இனியும் எப்படி நம்பிக்கொண்டிருக்க முடியும்.
ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. 5 லட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசு ஈவு இரக்கமில்லாமல் அவர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாம் பொறுமை காக்க முடியும்?.
கூட்டணித் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதிக்கு இந்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக வெளிப்படையாகவே இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.
இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம்.
பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை மத்திய அரசு அனுப்பவில்லை. அதற்கான பொருத்தமான காரணத்தைக்கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனின் கொழும்பு பயணம், போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று யாரும் நம்பவில்லை. அழிவின் விளிம்பில் நிற்கும் 5 லட்சம் அப்பாவி தமிழர்களை பாதுகாக்க போர் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அம்மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் மேனன்.
மேலும் இந்தியா-இலங்கை உறவு மிக ஆழமாகவும் சிறப்பாகவும் உள்ளதாக பூரிப்படைந்து இருக்கிறார். இவ்வாறு ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசின் போக்கில் மாற்றம் கொண்டு வர, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அழுத்தம் தர வேண்டும்.
கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். அத்துடன், தமிழினத்துக்கு எதிரான சக்திகளை ஓரம் கட்டி, மரியாதைக்குரிய தா.பாண்டியன், வைகோ ஆகியோர் முதல்வர் தலைமையில் ஓரணியில் திரள வேண்டும்.
நான் பல முறை பட்டினி கிடந்தவன். இன்னும் 3 நாட்களுக்கு இந்த வலியை தாங்கிக் கொள்ள எனக்கு முடியும். டாக்டர் ராமதாஸ் என்னை பரிசோதனை செய்து சில அறிவுரைகளை கூறினார். அதை மதிக்கிறேன். அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் முதல்வரும், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்ணாவிரதத்தை நிறுத்துவது தொடர்பாக முதல்வரின் வேண்டுகோள் குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இன்று முடிவெடுக்கப்படும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications