கண்வலி மருந்தால் வந்த சிக்கல்: ஆசிப் வாக்குமூலம்
மும்பை: நான் பயன்படுத்திய கண் வலிக்கான சொட்டு மருந்தில் தடை செய்யப்பட்ட நான்ட்ரோலின் மருந்து இருந்துள்ளது, அப்போது தனக்கு அது தெரியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப், ஐபிஎல் ஊக்கமருந்து ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப், இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போது தடை செய்யப்பட்ட நான்ட்ரோலின் ஊக்கமருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் ஊக்கமருந்து ஆணையத்தின் விசாரணையில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்:
நான் எந்த ஊக்கமருந்தும் எடுத்துக் கொண்டது கிடையாது.
எனக்கு கண்வலிக்காக கொடுக்கப்பட்ட கெரட்டில் என்ற மருந்தில் தடை செய்யப்பட்ட நான்ட்ரோலின் மருந்து இருந்துள்ளது. எனக்கு இவ்விஷயம் அப்போது தெரியாது என்று கூறியுள்ளார் ஆசிப்.
இந்த விளக்கத்தை அடுத்து அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.
இதுகுறித்து ஐபிஎல் ஊக்கமருந்து ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
ஆனால், ஆசிப் ஊக்கமருந்தை தவறுதலாக பயன்படுத்தியதாக அவர், அவரது வக்கீல் மற்றும் அவரது டாக்டர் கூறியுள்ளனர். ஆசிப் தெரிவித்திருக்கும் காரணம் புதிதாக இருப்பதால் தீர்ப்பு சில தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முடிவை அறிவிக்கும் முன் அவரது வாக்குமூலம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications