முல்லைத்தீவு வீழ்ந்தது - 95% போர் முடிந்தது: பொன்சேகா
கொழும்பு: முல்லைத்தீவு நகரை இலங்கை ராணுவம் பிடித்து விட்டது. விடுதலைப் புலிகளுடனான போர் கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது காட்டுக்குள் மட்டுமே புலிகள் உள்ளனர் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரே கடைசிப் பகுதி முல்லைத்தீவு மாவட்டம்தான். அதைப் பிடிக்க கடும் சண்டை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் கல்மடுக்குளம் அணைக்கட்டை விடுதலைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்து, ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை ராணுவம், முல்லைத்தீவு நகருக்குள் நுழைந்தது. இதை அரசு செய்தித் தொடர்பாளர் ரம்புகவெல்லா தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முல்லைத்தீவைப் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு நகருக்குள் இனறு ராணுவத்தின் 59வது பிரிவு படையணி நுழைந்துள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் நகர் முழுவதையும் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் முல்லைத்தீவு முழுவதும் ராணுவத்தின் வசம் வந்ததாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிரிகேடியர் நந்தனா உதவத்தா தலைமையிலான 59வது படைப்பிரிவினர் இதை நிகழ்த்தியுள்ளதாகவும் இலங்கை கூறியுள்ளது. முல்லைத்தீவு நகரம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகர் ராணுவத்தின் வசம் வந்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி ராணுவத்தின் வசம் இருந்து முல்லைத்தீவை கடும் கொரில்லாத் தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பிடித்தனர். இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் முல்லைத்தீவை தங்களது ராணுவ மற்றும் நிர்வாக தளமாக புலிகள் மாற்றினர்.
புலிகளின் கோட்டையாக இருந்த முல்லைத்தீவு நகரை, ராணுவத்தின் 59வது படைப்பிரிவு, ஜெயந்த குணரத்னே தலைமையிலான 593வது படைப்பிரிவு மற்றும் 7 ஜெமுனு வாட்ச் பிரிவு ஆகியவை இணைந்து கைப்பற்றியுள்ளன.
நந்திக்கண்டல் பகுதிக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள சிறிய நகரமே முல்லைத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு பிடிபட்டது குறித்த தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி சரத் பொன்சேகா, இதன் மூலம் விடுதலைப் புலிகளுடனான போரில் 95 சதவீதம் முடிந்து விட்டது.
முல்லைத்தீவு முற்றிலும் ராணுவம் வசம் வந்து விட்டது. தற்போது விடுதலைப் புலிகள் வனப்பகுதிகளிலும், கடற்கரையோரங்களிலும் மட்டுமே உள்ளனர்.
இந்த வெற்றியை இலங்கை மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications