இந்தியா தந்த ஏவுகணைகளால் தமிழர்களைக் கொல்கிறது இலங்கை: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா வழங்கிய ஏவுகணைகளைக் கொண்டுதான் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது இலங்கை படை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஹிட்லருக்கு பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத்துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதை சொன்னதற்காகத்தான், இலங்கையின் சண்டே லீடர்' ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்சே ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஒருவார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள விமானப்படையும், ராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவி தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் இலங்கை ராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எரிகணைகளை வீசுகிறது.

நேற்று வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள ராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், அப்பாவி தமிழ் மக்கள் 500 பேர் தாய்மார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமுற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், முதல் உதவிகூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுக செத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார்.

எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற, துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்கு கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்ததற்கு, இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?

தமிழக மக்களையும், உலக நாடுகளையும், ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.

ஐந்தரை லட்சம் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும் விமான குண்டு வீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்கு தெரியாதா?

விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் இனத்தையே அறுக்கத்தானே ராஜபக்சே இந்த தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான் அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைய வேண்டும் என்று கொக்கரிக்கிறான்.

இப்பிரச்சினையின் பின்னணியை, உண்மை நிலையை தமிழக மக்கள் உணரவேண்டும் என்பதற்காக சில சம்பவங்களை பட்டியல் இடுகிறேன்.

இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க திட்டமிட்டு ராணுவத்தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு 4 ஆண்டுகாலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, ராணுவ உதவிகளை செய்து வந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொறுப்பேற்ற உடன் முதல் வேலையாக இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதை தடுப்பதற்கு பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று அந்த சமயத்திலேயே இந்திய வெளி விவகாரத்துறை மந்திரி நட்வர்சிங் சொன்னதை தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செயல்படுத்தி வந்துள்ளது.

இலங்கை விமானப்படைக்கு ரேடார்களை கொடுத்து, சிங்கள விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய விமானப் படையின் தொழில்நுட்ப பிரிவினரை இலங்கைக்கே அனுப்பி வைத்ததோடு, பலாலி விமானதளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.

இலங்கையில் கடற்படையுடன் இந்திய கடற்படை தகவல் பரிமாற ஒப்பந்தம் செய்து கொண்டதோடு, சிங்கள கடற்படையினருடன் இணைந்தே கடல்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்கு பொருட்கள் கொண்டு வந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களை கடலில் மூழ்கடித்தது.

குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், ராணுவத் தளவாடங்களையும் சிங்கள தரைப்படைக்கும் வழங்கியது. சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் விமானங்களும் வாங்குவதற்கு வழி செய்து, சிங்கள ராணுவத்தினருக்கும், விமான படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை இந்திய ராணுவத்தை அனுப்பி, ஈழத்தமிழர்களின் உரிமைப்படை அணியான விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான ராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தை விடக் கொடூரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு யுத்தத்தில் பங்காளியாக சேர்ந்து இப்போது படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது.

துரோகத்தின் உச்சகட்டமாக இந்திய அரசு, சிங்கள ராணுவ தாக்குதலுக்கு உதவ, இந்திய ராணுவ டாங்கிகளையும், 3 ஆயிரம் ராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாக செய்து முடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மொத்தத்தில் ராஜபக்சே அரசு நடத்துகின்ற இன அழிப்பு யுத்தத்தை பின்னால் இருந்து இயக்கி வந்துள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விஷம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தை தீட்டி அதனை செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ் இனத்துக்கு துரோகம் செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்த துரோகத்தை தமிழ் மக்களும் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+