சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க அதிகாரி நியமனம் - அரசு உத்தரவு செல்லும்

Subscribe to Oneindia Tamil

Chidhambaram Nataraj Temple
சென்னை: சர்ச்சைக்குரிய சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க தமிழக அரசு இந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி ஒருவரை நியமனம் செய்தது சரியான முடிவு தான். இதை தமிழக அரசு நி்ர்வகிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தீட்சிதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இங்கு தமிழில் தேவாரம், திருவாசகம் பாட தீட்சிதர்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றனர். மேலும், கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையும் உள்ளது.

இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறை வசம் இல்லை. மேலும், கோவிலில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, கோவிலை நிர்வகிக்க 1987ம் ஆண்டு தமிழக அரசு செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் தீட்சிதர்கள் அப்பீல் செய்தனர். அப்பீலை விசாரித்த கமிஷனர் அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என்று தீர்ப்பு கூறினார்.

பின்னர் இதை எதிர்த்து 2006-ம் ஆண்டில் தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது.

இதே சமயம், சிதம்பரம் கோவில் கருவறை முன்பு தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சிவனடியார் ஆறுமுகசாமியும், தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் சத்தியவேல் முருகன் என்பவரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.பானுமதி விசாரித்தார். தீட்சிதர்கள் சார்பில் வாதாடுகையில், நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலை நாங்கள் தான் நிர்வகித்து வருகிறோம் என்றும், இதில் அரசு குறுக்கிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கோவில் பொது சொத்து அல்ல என்றும், அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் அரசு தலையிட முடியாது என்றும், எங்கள் மத நடவடிக்கையில் அரசு தலையிட கூடாது என்றும் தீட்சிதர்கள் சார்பில் வாதாடப்பட்டது.

தீட்சிதர்களின் நிர்வாகத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன என்றும், எனவே இந்த கோவிலை நிர்வகிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று அரசு வக்கீல் குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில்,

தீட்சிதர்கள் அரசியல் சட்டம் 25-வது பிரிவின் கீழ் மட்டுமே பாதுகாப்பு கோர முடியும். அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் உரிமை கோர முடியாது. கோவிலுக்கு வரக்கூடிய காணிக்கை, கட்டளைகள் ஆகியவற்றை மத நடைமுறைகளாக கூற முடியாது.

அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் பொது தீட்சிதர்கள் சிறுபான்மையினர் என்று கூறி கோவிலை நிர்வகிக்க உரிமை கோர முடியாது. இக்கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமனம் செய்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல.

இந்து சமய அறநிலையத்துறை 45(1) பிரிவின் கீழ் கமிஷனர் அமல்படுத்த முடியாது என்று கூற முடியாது. ஒரு கோவிலில் முறைகேடு நடப்பதாக தெரியவந்தால் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

பூஜைக்கு பரம்பரை உரிமை கோரலாம். ஆனால் மக்கள் காணிக்கை, கட்டளைகள் இவையெல்லாம் பூஜை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இவற்றை நிர்வகிக்க அரசுக்கு உரிமை உண்டு.

இக்கோவிலை பொறுத்தவரையில், முறைகேடு நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இது கற்பனையானது அல்ல. முறைகேடுகள் நடக்கும்போது செயல் அதிகாரியை நியமிப்பது அவசியமாகிறது.

தீட்சிதர்கள் கணக்குகளை ஒழுங்காக பராமரிக்கவில்லை. கோவிலுக்கு வரவேண்டிய வருமானத்தை வசூலிக்கவில்லை.

கடவுளுக்கு செலுத்திய காணிக்கைகளுக்கு முறையாக கணக்கு வைக்கவில்லை. அக்கோவிலில் உள்ள தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் சரியாக பரிசீலித்த பிறகுதான் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் திருப்தியடைந்த பிறகு நிர்வாகத்தை சீர்படுத்த செயல் அதிகாரியை நியமித்தார்.

ஒரு கோவிலை ஒழுங்குபடுத்த, அதன் நிர்வாகத்தை சீர்படுத்த, செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டது சரிதான். ஆகவே, பொது தீட்சிதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

பக்தர் ஆறுமுகசாமி, தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவில் சொத்துக்கள் இனிமேலாவது முறையாக நிர்வகிக்கப்படும் என்று கோர்ட்டு நம்புகிறது. பொது தீட்சிதர்கள் செயல் அதிகாரிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் இன்னும் ஒரு வாரத்திற்குள் செயல் அதிகாரி நிர்வகிப்பதற்கு தேவையான தக்க உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+