வன்னியிலிருந்து சுகாதாரப் பணியாளர்கள் வெளியேற அரசு உத்தரவு
கொழும்பு: வன்னியில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் போரினால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பெரும் பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போரினால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் எட்டு டாக்டர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வரும் இவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இலங்கை சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியேறாதவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளு.
தினசரி நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிரிழப்பதும், காயமடைவதுமாக உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளி்ப்பதில் ஏற்கனவே மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் திணறி வருகின்றனர். மருத்துவமனைகள் இல்லாததும், மருந்து, சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததுமே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் அனைவரும் வெளியேற வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை வசதி என்பது அறவே இல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ராணுவமும், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு (தமிழர்களைத்தான் இப்படி பொதுவாக கூறுகிறது ராணுவம்) உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என அது எச்சரித்துள்ளது.
மேலும் மருத்துவ மற்றும் சிகிச்சை வசதிகள் தேவைப்படும் பகுதிகளில் ராணுவம் தனது நிலையை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும் என ராணுவத்திற்கு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே முல்லைத்தீவு பிராந்தியத்தில் நிலை கொண்டிருக்கும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களை ராணுவத்தினர் துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் நீங்களும், உங்களது குடும்பத்தினரும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராணுவத்தினர் மிரட்டுகின்றனராம்.
இதுதவிர, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் எனக் கருதப்படும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் என ராணுவம் சந்தேகிக்கும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர் உத்தரவிட்டவுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்து, உணவுப் பொருட்களை தடை செய்யவும் ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை வரும் நாட்களில் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
வன்னிப் பகுதிக்கு ஜனவரி 29ம் தேதி முதலே உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications