மும்பை சதி: ஒத்துக் கொண்டது பாக்-கஸாப் மீதும் வழக்கு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இதைத் தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே நழுவியும், மழுப்பியும், குழப்பியும் வருகிறது பாகிஸ்தான்.
முதலில் கஸாப் தனது நாட்டைச் சேர்ந்தவன் இல்லை என்றார்கள். பின்னர் இந்தியா கொடுத்த தகவல்கள் ஆதாரங்கள் இல்லை என்றனர். பின்னர் கஸாப்பின் டிஎன்ஏ சோதனை முடிவுகளைக் கேட்டனர்.
இவ்வாறு தொடர்ந்து குழப்பி வந்ததால் கடுப்பான இந்தியா, பாகிஸ்தான் தெளிவான நிலையை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் பாகிஸ்தானின் குழப்பவாதத்தைக் கண்டித்தன.
இந்த நிலையில் கஸாப் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அனுப்பியிருந்த ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைக்கு பாகிஸ்தான் இன்று முறைப்படி பதிலை அனுப்பியது.
இதுகுறித்து ரஹ்மான் மாலிக் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்பது உண்மைதான்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. கஸாப் உள்ளிட்ட 3 பேர் மீது பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம்.
சம்பாவில் உள்ள சிறப்பு புலனாய்வுப் படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையின் எண் 01/2009 ஆகும்.
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட கேள்வி அறிக்கையின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போராடும். குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்தும்.
இந்திய மக்களுடன் நாங்கள் எப்போதும் உள்ளோம். சர்வதேச சமுதாயத்துடனும் நாங்கள் இருக்கிறோம். யாரெல்லாம் தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களுடன் நாங்களும் இருக்கிறோம்.
இருப்பினும் எங்களது விசாரணையை பலப்படுத்த இந்தியாவிடமிருந்து மேலும் சில தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான பணத்தை அனுப்பிய ஹமத் அமீன் சாதிக் என்பவரைக் கைது செய்துள்ளோம். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு முக்கியத் தொடர்பு உள்ளது.
மேலும், தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளில் அல் பாஸ் என்ற பெயருடைய படகை நாங்கள் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளோம். அதேபோல, அல்ஹசானி என்ற படகின் உரிமையாளரையும் கைது செய்துள்ளோம்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு ஸ்பெயினிலிருந்து வாய்ப் போன்களை வாங்கிக் கொடுத்த ஜாவேத் இக்பால் என்பவரையும் கைது செய்துள்ளோம். தீவிரவாதிகளுக்காக ஐந்து சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்ததாகவும் இக்பால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார் மாலிக்.












Click it and Unblock the Notifications