'பிரதமர் அத்வானி'- 2000 இணைய தளங்களில் பாஜக பிரசாரம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக இணையத் தளங்களை பெருமளவி்ல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது பாஜக. அத்வானியை பிரதமராக தேர்வு செய்யுங்கள் என்று அமெரிக்க அதிபர் ஸ்டைலில் சுமார் 2,000 இணையத் தளங்களில் விளம்பரம் செய்து வருகிறது.
விரைவில் காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முன்னணியின் ஆட்சி முடிவுறுவதை அடுத்து வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பொது தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
இதற்கு இன்னும் முழுதாக இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் தேர்தல் ஜுரம் அனைத்து கட்சிகளையும் பீடிக்க ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் வேலையில் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.
மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமராவார் என காங்கிரஸ் கூறி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் இது குறித்து இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. அதேசமயம், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டார்.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள், உலக பொருளாதார நெருக்கடியிலும் இந்திய அரசை எந்த சிக்கலும் இல்லாமல் சிறப்பாக கொண்டு செல்வது போன்றவற்றை முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக எஸ்.எம்.எஸ் மூலம் பிரச்சாரம் செய்கிறது.
ஆனால் இவர்களுக்கு ஒரு படி மேலே சென்றுள்ள பாஜக, பிரதமர் பதவிக்கு அத்வானி என்ற தலைப்பில் இன்டர்நெட்டை ஆக்ரமிக்க துவங்கியுள்ளது.
எந்த இணையத் தளத்தைத் திறந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் அத்வானிக்கான விளம்பரம் பளிச்சிடுவதை தவிர்க்க முடியாது.
அத்வானிக்கென ஏற்கனவே பாஜக ஒரு இணையத் தளத்தை உருவாக்கியுள்ளது. அதில் அத்வானி குறித்த அனைத்து தகவல்களும், பேச்சுக்கள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையத் தளத்தை இப்போது கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட இணையத் தளங்களில் விளம்பரமாக கொடுத்துள்ளது பாஜக.
இது குறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் புரோத்யுத் போரா கூறுகையில்,
அத்வானிக்கு பிரதமர் பதவி என்பது தான் இதன் மையகருத்து. இந்தியாவுக்கு வலிமையான தலைவர் கிடைக்க, மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது இந்த விளம்பரத்தின் நோக்கம்.
இதில் உலக அளவில் இந்தியா உயர வேண்டுமா என்ற கேள்வியுடன் விளம்பரம் ஒன்று உள்ளது. எங்கள் விளம்பரங்கள் இந்தியர்கள் அதிகம் பார்க்கும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு பத்திரிக்கை அத்வானி, பாகிஸ்தானில் விளம்பரம் செய்வதாக எழுதியிருந்தது. அது தவறு. இந்தியர்கள் அதிகம் பார்க்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பாகிஸ்தானின் டான் போன்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் அனேக இந்தியர்களை சென்றடையும்.
இந்த இணையத்த ளங்களின் வாசகர்கள் அனைவரும் எங்களுக்கு ஓட்டுப்போட முடியாது. ஆனால், அதை பார்க்கும் இந்தியர்கள் பாஜகவை நன்றாக புரிந்து கொள்வார்கள். அதேபோல் டிஸ்கவரி சேனலிலும் எங்கள் விளம்பரத்தை வெளியிட்டுள்ளோம்.
அத்வானியின் இணையத் தளத்தில் அவரை பற்றிய அனைத்து குறிப்புகளும் இருக்கிறது. இதை அனைவரும் வாசித்துவிட முடியாது என்பதால் மற்ற இணையத் தளங்களில் விளம்பரம் செய்கிறோம்.
அத்வானியின் இணையத் தளத்தில் 800 பக்கங்கள் உள்ளன. 250 வீடியோக்களும், 800 படங்களும் இருக்கின்றன. அதே போல் அவரது இணையதளத்துக்கு வருபவர்கள் தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்தும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். கடந்த மாதம் அத்வானி ஒரு இணையத் தளத்தில் அதன் உறுப்பினர்களுடன் சாட்டிங் செய்தார்.
தேர்தல் களத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்துவதில் நாங்கள் தான் முன்னணியில் இருக்கிறோம் என்றார் போரா.












Click it and Unblock the Notifications