தங்கம் விலை... தாங்காதப்பா!
சென்னை: இந்தியாவில் இதுவரை காணாத விலை உயர்வைக் கண்டுள்ளது தங்கத்தின் விலை. ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.544 கூடி, புதிய 'சாதனை' படைத்துள்ளது.
இதுவரை நாளொன்றுக்கு ரூ. 50 முதல் 100 ரூபாய் மட்டுமே உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக ஒரு பவுனுக்கு ரூ.200 முதல் ரூ.280 வரை உயர்ந்துகொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.11,232-க்கு விற்பனை ஆனது. நேற்று மேலும் உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்து 480க்கு விற்பனை ஆகி புதிய சாதனை படைத்தது.
அதாவது நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,420-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.11,360க்கும் விற்பனை ஆனது. மாலையில் பவுனுக்கு ரூ.120 கூடி, ஒரு பவுன் ரூ.11,480க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. அதாவது கடந்த 2 நாட்களில் பவுனுக்கு 544 கூடியது.
'காலியான' கடைகள்!:
இதனால் தங்கம் வாங்க நகைக்கடைப் பக்கம் வரவே வாடிக்கையளர் பயப்படும் சூழநிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த மூன்றுப நாட்களில் தங்க நகை விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது என்கிறார் சென்னை பிரின்ஸ் ஜுவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் பிரின்ஸன் ஜோஸ்.
தங்கம் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.23 ஆயிரத்து 490 ஆகி இருந்தது, நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.24 ஆயிரத்து 565 ஆக உயர்ந்தது.
தங்க கட்டுப்பாடு வருமா மீண்டும்?:
தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த 1978ம் ஆண்டு மத்திய அரசு தங்க கட்டுப்பாடு சட்டம், வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி, மத்திய அரசிடம் கைவசம் உள்ள தங்க கட்டிகளை ஏலம் விடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தங்கம் விலை கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் இப்போது மத்திய அரசு தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் விலை தாறுமாறாக உயர்ந்துவருகிறது.
காரணம் என்ன?:
தங்கத்தின் விலை உயர்வுக்கு தற்போது புதிதாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும், தங்கத்தை அதிக அளவில் வாங்கப் போவதாக ரஷிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆகியவையும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இதுதவிர, பொருளாதார மந்த நிலை தொடருவதாலும், பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதாலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
