யாஹூ இந்தியா சிஇஓ சரத் ராஜினாமா-முகர்ஜி புதிய சிஇஓ
பெங்களூர்: யாஹூ இந்தியா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தலைமை செயலதிகாரி சரத் சர்மா அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். புதிய தலைமை செயலதிகாரியாக செளவிக் முகர்ஜி பொறுப்பேற்கவுள்ளார்.
இதுகுறித்து யாஹூ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாஹூ இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சி சிஇஓ சரத் சர்மா, யாஹூவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக யாஹூவில் பணியாற்றி வரும் செளவிக் முகர்ஜி, புதிய தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
யாஹூ இந்தியாவின் பணிகளை இனி செளவிக் முகர்ஜி தலைமையேற்று நடத்திச் செல்வார்.
யாஹூ இந்தியா நிறுவனத்தை செம்மைப்படுத்தியவர் சரத் சர்மா. அவரது பங்களிப்புக்காக அவரை யாஹூ நிறுவனம் பாராட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் செளவிக் முகர்ஜி, தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்புதான், தனது இந்தியக் கிளையில் 40 முதல் 60 பணியாளர்களை நீக்கியது யாஹு. மேலும், அந்த நிறுவனத்தின் சிஐஓ விஸ்வநாதன் கிருஷ்ணமூர்த்தியும் பதவி விலகினார். இந்த நிலையில் தலைமை செயலதிகாரி சர்மாவும் விலகியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் சர்மா யாஹூ நிறுவனத்தில் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் சிமன்டெக் நிறுவனத்தில் பொது மேலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications