மதுரை-பேனர்கள் அகற்றம்: சேலம்-ரவுடிகள் கைது
மதுரை & சேலம்: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என மதுரை கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், துணை கமிஷனர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஆர்.ஓ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக சார்பில் நகர மாவட்ட செயலாளர் தளபதி, அதிமுகவின் நகர மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதிமுக மாநில தொழிற்சங்க செயலாளர் மகபூப் ஜான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் அண்ணாத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சரவணன், பாமக நகர செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில்,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்களையும் 24 மணி நேரத்திற்குள் அகற்றிவிட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் சீத்தாராமன்.
சேலத்தில் ரவுடிகள் கைது...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பிரச்சினை செய்யக்கூடிய ரவுடிகள் பட்டியலை டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தயாரித்தார். இதையடுத்து அவர்களை கைது செய்யும்பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது.
இந்த பட்டியலில் உள்ள 168 ரவுடிகளில் இதுவரை 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள ரவுடிகளை கைது செய்வதில் தற்போது போலீசார் மும்முரமாக இருக்கின்றனர்.
குண்டர் சட்டம் பாயும்...
ரவுடிகளை அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான சென்ற போலீசார் கைது செய்து ஆர்.டி. ஓ.க்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் ரவுடிகளிடம் இனிவரும் காலங்களில் தவறு செய்ய மாட்டோம்' என நன்னடத்தை பத்திரத்தில் எழுதி வாங்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறுகையில்,
ரவுடிகள் தேர்தலின் போது பூத்தை கைப்பற்றுதல், வாக்காளிக்க வரும் பொதுமக்களிடம் தகராறு செய்தல், வேட்பாளர்களை தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரது மீதும் 110, 109 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மயில்வாகனன்.












Click it and Unblock the Notifications