வைகோ பங்கேற்ற திருமண விழாவைப் புறக்கணித்தார் கண்ணப்பன்
உடுமலைப்பேட்டை: கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்ட திருமண விழாவுக்கும் வராமல் புறக்கணித்தார் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அவைத் தலைவர் கண்ணப்பனுக்கும் இடையே பூசல் முற்றியுள்ளது.
வைகோவிடம் சொல்லாமல் கொள்ளாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியை போய் கண்ணப்பன் பார்க்க இதனால் அதிருப்தி அடைந்தார் வைகோ.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல் முற்றியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார் கண்ணப்பன்.
டெல்லியில் மதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், சென்னையில் நேற்று நடந்த கட்சி ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றுக்கு அவர் வரவில்லை.
இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில், மதிமுக பிரமுகர் சின்னச்சாமி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதற்கு வைகோ தலைமை தாங்கினார்.
இதற்காவது கண்ணப்பன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் வைகோவை சந்திக்காமல் தவிர்க்கும் வகையில் நேற்று இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கண்ணப்பன் வந்தார். இன்று நடந்த திருமணத்திற்கு அவர் வரவில்லை.
வைகோவை, கண்ணப்பன் தீவிரமாக தவிர்க்க ஆரம்பித்திருப்பது இதன் மூலம் புலனாகியுள்ளது. கண்ணப்பன், வைகோ இடையிலான இந்த மோதல் எங்கு போய் முடியும் என்ற கவலையில் மதிமுகவினர் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
