வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என உண்ணாவிரத நிறைவில் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னையில் வசூலான தொகை மற்றும் மாவட்டங்களில் வசூலான தொகையுடன் சேர்த்து, அதிமுக பொது நிதியிலிருந்து தனியாக ரூ. 1 கோடி நிதியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக அனுப்பி வைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது.
உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார்.
பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார்.
உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
மேடைக்கு அருகில் பெரிய பந்தல் போடப்பட்டு அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலையில் அடித்த வெயிலையும், பிற்பகலுக்கு மேல் தூறிய மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பித்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜெயக்குமார் மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
உண்ணாவிரதம் போராட்டத்தையொட்டி சேப்பாக்கம் பகுதியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னையைப் போலவே அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் பெரும் திரளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாவட்டங்களில் நடந்த உண்ணாவிரதப் பந்தலிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு அவற்றிலும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நிதியை அளித்தனர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிகளும், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆகியவையும் இந்த உண்ணாவிரத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இலங்கை-இது ஜெவின் 2வது உண்ணாவிரதம்:
இலங்கைப் பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2வது முறையாகும். கடந்த 1985ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
காவிரிப் பிரச்சனைக்காகவும் அவர் மெரீனா கடற்கரையில் திடீர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications