இலங்கையில் இந்திய மருத்துவ குழு
கொழும்பு: 52 பேர் அடங்கிய இந்திய மருத்துவக் குழுவினர் இலங்கையின் புல்மோடை பகுதிக்கு இன்று சிகிச்சைக்காக புறப்பட்டுச் சென்றனர்.
இந்தக் குழுவில் டாக்டர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கையின் கிழக்குப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் சிகிச்சை அளிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோடை என்ற இடத்தில் முழு அளவிலான மருத்துவமனை ஒன்றை இந்தக் குழு நிர்மானித்து செயல்படும்.
இந்திய மருத்துவக் குழு முற்றிலும் அதன் சொந்த வசதிகளைக் கொண்டு செயல்படவுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே புல்மோடைக்கு 20 டிரக்குகளில் மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவை போய்ச் சேர்ந்து விட்டனவாம்.
இன்று காலை கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் தங்கியிருந்த மருத்துவக் குழுவினரை இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிரிபாலாடிசில்வா சந்தித்தார்.
அந்த நிகழ்ச்சியின்போது இந்தியத் துணைத் தூதர் அலோக் பிரசாத், இலங்கை மதிப்பில் 70 மில்லியன் மதிப்புடைய மருத்துவப் பொருட்களை இலங்கை அமைச்சரிடம் வழங்கினார்.
இந்தியமருத்துவக் குழுவினர் எத்தனை காலம் இலங்கையில் இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தேவைப்படும் வரை அவர்களது இருப்பு நீடிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications