நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு..பிரசார இயக்கம்
சென்னை: குற்றப் பின்னணி, வழக்குகளின் பின்னணியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரி ஒரு பிரசார இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் திரிலோசன் சாஸ்திரி இதுகுறித்து கூறுகையில், கறை படிந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து எங்களது இயக்கத் தொண்டர்கள், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி பிரசாரம் செய்வார்கள்.
இதன் மூலம் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்காமல் தடுக்க முடியும்.
தமிழகத்தில், தமிழிலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஏராளமான வாக்காளர்களை எங்களால் அடைய முடியும்.
சமூகத்தைக் காக்கும், வழிநடத்தும் சட்டங்களை முடிவு செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அப்படிப்பட்ட இடத்திற்கு குற்றப் பின்னணி கொண்டவர்கள் வராமல் தடுக்க முனைப்புடன் இருக்கிறோம்.
சமீபத்திய திருமங்கலம் இடைத்தேர்தலில் பண பலம் விளையாடியதை அனைவரும் அறிவர். வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications