டாக்டரை அனுப்பி உதவிய அன்புமணி- கருணாநிதி
சென்னை: எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்திலிருந்து டாக்டர் ஜெய்ஸ்வாலை உடனடியாக அனுப்பி உதவினார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ். அதேபோல நேரிலும் வந்து பார்த்து நலம் விசாரித்தார் என முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகில் ஆபரேஷன் செய்து கொண்டு நலமடைந்து வீடு திரும்பியுள்ள முதல்வர் கருணாநிதி, தான் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த நிகழ்வுகளை டைரியாக எழுதி வருகிறார்.
அந்த வரிசையில் நேற்று அவர் வெளியிட்ட டைரி அறிக்கையில், அமைச்சர் அன்புமணி ராமதாஸ் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் டைரியிலிருந்து ..
6.2.09
பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னணியினரும், அமைச்சர்களும் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து என் உடல் நிலையை கேட்டறிந்தும் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து நிலைமைகளை விளக்கியும் சென்றனர்.
என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், என் மகள்கள் செல்வி, கனி ஆகியோரும் செவிலியர்களோடு செவிலியர்களாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள்.
செல்வி தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது. கனியும் பல பொறுப்புகளுக்கிடையே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமகள்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர்.
தம்பிகள் பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராஜா ஆகியோர் அன்றாடம் இரவில் மருத்துவமனையிலேயே தங்கி, ஒத்துழைப்பாக இருந்தனர். வேறு சில நாட்களில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோரும் மருத்துவமனையிலே தங்கியிருந்தனர்.
என் வயதில் அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது என்றாலும், முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வலி நீங்குவதற்கு வழி என்று என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் மோகன்தாஸ் கூறினர். அபாயகரமான விஷயங்களை என்னிடம் சொல்வதற்கு எனது குடும்பத்தார் முன்வராமல், அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது என்றும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சமாதானப்படுத்தினர்.
ஆனால் அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன். ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்தும் வருவதற்கு கண்ணீர் காத்திருந்தது. எனவே நானே அவர்களுக்கு நான் தைரியம் கூறினேன்.
அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளும் இடம் பற்றி டாக்டர்கள் ஆலோசித்தனர். நரம்பியல் டாக்டர் ஏ.வி.சீனிவாசன், "டெலி-மெடிசின்'' மூலம் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு, இந்த அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை யெல்லாம் அறிந்தார். இறுதியாக, டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பணியாற்றும் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.
தயாநிதிமாறன் எம்.பி. மத்திய மந்திரி டாக்டர் அன்புமணியிடம் பேசி டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக அன்புமணி தகவல் அனுப்பினார்.
7.2.09 அன்று, அப்பல்லோ மருத்துவமனையின் முதுகெலும்பு டாக்டர் சாஜன் ஹெக்டேவும் அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியானது என்றும் கருத்து தெரிவித்தார். மாலையில் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் வந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டமும் என்னை பரிசோதித்தனர். தை மாதம் என்பதால் தை' (தொடை) வரை வலி இருக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறினேன். அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
11.2.09 அன்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நான் அடிக்கல் நாட்டவேண்டும் என்றும், அமைச்சர்கள் இருவரை சிவகங்கைக்கு அதேநாளில் அனுப்பி வைத்தால் அங்கே விழாவினை நடத்திக் கொள்வதாகவும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார். நான் ஒப்புதல் அளித்தேன்.
வலியில் கூட ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் ஏடுகளைப் படிக்க நான் தவறியதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சகோதர யுத்தம் இங்கும் கூடாது என்றும் குறிப்பாக தமிழகத்திலே உள்ள அனைவரும் இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்றும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே'' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.
அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியும், மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ, இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டுமென்று எழுதினேன். விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இதற்கும் பதிலளித்தேன்.
இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவை சார்பில் தென்சென்னை தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எழுச்சிப் பேரணி பற்றி விவரம் கேட்கச் சொன்னேன்.
மருத்துவமனைக்கு வந்து டாக்டர் அன்புமணி எனது உடல்நலம் விசாரித்தார்.
5 நிமிடம் என வந்து 50 நிமிடம் இருந்த 'இந்து'!
9.2.09 அன்று நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தனி அறையில் அதிகாரிகளுடன் காலை, மாலையில் விவாதித்தேன். 5 நிமிடங்கள் சந்திப்பதாக கூறி வந்த இந்து பத்திரிகை செய்தியாளர், ஐம்பது நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். மருத்துவமனையிலே இருக்கும்போதும் அதிகமாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? என்று அவர் கேட்ட கேள்விக்கு, மக்கள் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நம்பிக் கொடுத்திருக்கும்போது, படுக்கையிலே இருப்பதாலேயே நான் மக்களுக்காகப் பணியாற்றுவதை நிறுத்த முடியுமா என்று பதில் கூறினேன். முக்கிய கோப்புகளில் மருத்துவமனைக்கு வரவழைத்து கையெழுத்திட்டேன்.
10.2.09 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஒரு கட்சியின் தலைவர் வழக்கம்போல் அறிக்கை விட்டிருந்தார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக இருந்த போதும் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது பற்றி விவரமான பட்டியலை எழுதி ஏடுகளுக்கே அனுப்பச் செய்தேன்.
மாலையில் சோனியா காந்தி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தது, அடுத்த நாள் நடைபெறவுள்ள அறுவை சிகிச்சை பற்றியெல்லாம் விவரமாகப் பேசினார். அறுவை சிகிச்சை முடிந்து நலம்பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டுமென்றும் வாழ்த்தினார்.
சிறுநீரகத் துறை நிபுணர் டாக்டர் சவுந்தரராசன் சோதனை நடத்தினார். அறுவை சிகிச்சைக்கான ஒப்புதலையும் கையெழுத்தையும் குடும்ப மருத்துவர் டாக்டர் கோபால் மூலம் முறைப்படி பெற்றார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications