பிரதமர் பவார்: பாஜக நிலை என்ன?-சிவசேனா
மும்பை: மராட்டியரை பிரதமராக்குவது என்பது குறித்து பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என அக் கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனா திடீரென கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பிரதமர் பதவி ஆசை பிடித்து ஆட்டுகிறது. இதற்காக காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டே மராட்டிய கட்சியான சிவசேனாவுடனும் மறைமுகப் பேச்சு நடத்தினார்.
ஆனால், இருவரும் தனித்துப் போட்டியிடுவதே நல்லது. அப்போது தான் இரு கட்சிகளுமே அதிக இடங்களைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்ததால் சிவசேனாவும் அவரும் கூட்டணி அமைக்கவி்ல்லை.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை காங்கிரஸ் உணர்ந்தே உள்ளது.
இந் நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் மராட்டியரான பவாரை பிரதமராக்க வேண்டும் என்று கூறி வருகிறது சிவசேனா. இந்தக் கட்சியும் தேர்தலுக்குப் பின் என்ன நிலையை வேண்டுமானாலும் எடு்ககும் என்பதை பாஜகவும் உணர்ந்தே உள்ளது.
இது தொடர்பாக, சிவசேனாவின் சாமனாவில் பத்திரிகையில் ஒரு கட்டுரையும் வெளியாகியுள்ளது. அதில் தென்னகத்தைச் சேர்ந்தவர்கள், வட இந்தியர்கள் எல்லாம் பிரதமராகிவிட்டார்கள். ஆனால், மராட்டியர் யாரும் இதுவரை பிரதமராகவில்லை. இந்தக் குறை போக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிரதமர் பதவிக்கு கிட்டத்தட்ட கோட்டா சிஸ்டத்தையே கோரியுள்ளது சிவசேனா.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்ர வுத் நிருபர்களிடம் கூறுகையில்,
சரத்பவார் பிரதமராவதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், அதை மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. மராட்டியர் ஒருவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் தனது நிலைப்பாடு குறித்து பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.
இதை பாஜக மாநிலத் தலைவர்களான முண்டே வரவேற்க மாட்டார். உயர் பதவிகளுக்கு மராட்டியர்கள் தகுதியற்றவர்கள் என யாரேனும் கருதுவார்களேயானால், அதை அவர்கள் தைரியமாக சொல்ல வேண்டும் என்றார்.
இதன்மூலம் பாஜவை சிவசேனா மேலும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications