கோவை எக்ஸ்பிரசில் தீ-பைக் எரிந்து சாம்பல்
கோவை: கோவையிலிருந்து நாகர்கேவிலுக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சரக்கு பெட்டியில் நேற்று திடீரென்று தீ பற்றி கொண்டது. என்ஜின் டிரைவரின் சமயோசித முயற்சியால் ரயில் நிறுத்தப்பட்டு தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதில் சரக்கு பெட்டியில் இருந்த பைக் எரிந்து சாம்பலானது.
கோவையிலிருந்து நேற்று காலை வழக்கம்போல் நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கிளம்பியது. வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் 8.30 மணிக்கு சிங்காநல்லூருக்கு அருகே சரக்கு பெட்டி திடீரென்று தீ பிடித்து எரிந்தது. சரக்கு பெட்டி என்ஜினுக்கு அருகில் இருந்ததை அடுத்து டிரைவர்கள் அதை உடனடியாக கண்டுபிடித்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சரக்கு பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ஒரு பைக் எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டது. டிரைவர்கள் விரைவாக செயல்பட்டு தகவல் கொடுத்ததை அடுத்து தீ அருகிலிருந்த பெண்கள் பெட்டி உள்ளிட்ட மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் பைக் முழுவதுமாக சேதம் அடைந்தது. பின்னர் அந்த ரயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
விபத்தில் எரிந்து போன மோட்டார் பைக், கோவையை சேர்ந்த காசிலிங்கம் என்பவருடையது என்றும் அது நாகர்கோவிலுக்கு அனுப்பப்பட்டது என்றும் தெரிகிறது. அந்த பைக்கில் இருந்த பேட்டரியில் கோளாறு ஏற்பட்டு, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.












Click it and Unblock the Notifications