சேது சமுத்திர திட்டத்தை தடுத்த ஜெ-பிரச்சாரம் செய்ய கருணாநிதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2004ம் ஆண்டு தேர்தலின்போது, வாஜ்பாய் முன்னிலையிலே தண்டமாக தமிழகத்தில் மதிமுக என்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வாய்ச் சவடால் வைகோ என்றும்; தடம் புரண்டு பேசும் தத்துவ பச்சோந்திகளாகிய கம்யூனிஸ்டுகள் என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். அதை அந்தக் கட்சித் தலைவர்கள் மறந்துவிட்டாலும், நாம் மறக்கவில்லை.என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மே 13-ந் தேதிதான் கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

மே 13ம் தேதிக்கும், நமக்கும் ஒரு பொருத்தம் உண்டு. 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13ம் தேதி தான் கவர்னர் மாளிகையில் நான் முதல்வசராகப் பதவியேற்றுக் கொண்டேன்.

2004ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு நம்முடைய கூட்டணி நாற்பது இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது 13ம் தேதியன்றுதான். 2006ம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13ம் தேதி தான் நான் ஐந்தாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

ஏன் தற்போது உடல் நலம் பெற்று 45 நாட்களுக்குப் பிறகு அரசின் தலைமைச் செயலகம் சென்றதுகூட 13ம்ந் தேதியன்றுதான். பெரியார், அண்ணா வழி பகுத்தறிவுவாதியாகிய எனக்கு நல்ல நாள், கெட்ட நாள் என்றெல்லாம் எழுதுவதிலும், பேசுவதிலும், நம்புவதிலும் ஆர்வமும் இல்லை, அக்கறையும் இல்லை.

இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு 13ம் தேதி என்பது பிடிக்காத ஒன்று. தீய நாள் என்பதற்காக அந்நாளில் எச்செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதே 13ம் தேதி தான் எப்படியோ நமக்கு பொருந்தி வந்துவிட்டது. இதில் சாஸ்திர சம்பிரதாயம் ஒன்றுமில்லை.

கூட்டணி குறித்து நம் தேர்தல் குழுவினரும் காங்கிரஸ் தேர்தல் குழுவினரும் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். றுதியாக எந்தெந்த கட்சிகள் நம்முடைய அணியிலே இடம் பெறவுள்ளன, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பன பற்றியெல்லாம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

மேல்மட்ட அளவில் இத்தகைய பணிகள் நடைபெறத் தொடங்கிய போதிலும், கழக உடன்பிறப்புக்களாகிய உங்கள் பணிதான் மகத்தான பணி என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

கழகத்தின் சார்பில் சுமார் 1,500 பேர் 40 தொகுதிகளிலே போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளார்கள். நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க இயலாது.

கூடுமானவரை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் பரவலாக உள்ளது. அதற்காக அனைவரையுமே புதியவர்களாக நிறுத்தவும் இயலாது.

கடந்த தேர்தலுக்கும், இந்தத் தேர்தலுக்கும் இடையே தொகுதிகள் பிரிப்பதில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதிலே சில குழப்பங்களும் உள்ளன.

இந்த மாறுதல்களையெல்லாம் புரிந்துகொண்டு மூட நம்பிக்கைகளை வலியுறுத்தி முத்தான திட்டங்களை முழுமை பெறவிடாமல் தடுக்கின்ற தருக்கர் தம் சூழ்ச்சி தவிடு பொடியாகவும் புறப்படுவோம் பொதுத் தேர்தல் எனும் ஜனநாயக அறப்போர் முனைக்கு என அழைக்கிறேன்- உன்னையும், உன் போன்ற நமது கூட்டணியின் உடன் பிறப்புகளாம் செயல் வீரர்களையும்.

இந்தத் தொகுதியில் நமது வேட்பாளர்தான் நிற்பார் என்று எதிர்பார்த்திருந்திருக்கலாம், அந்தத் தொகுதி தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சுவார்த்தையின்போது தோழமைக் கட்சிக்குச் சென்றிருக்கலாம். எந்த தொகுதியாக இருந்தாலும், அங்கே நமது கூட்டணியின் சார்பில் யார் நின்றாலும் அது நம்முடைய தொகுதி, நம்முடைய வேட்பாளர் என்ற எண்ணத்தோடு நீ பாடுபடுவாய் என்பதும் எனக்குத் தெரியும்.

அதைப் போலவே நமது கட்சிக்குள்ளேயே இவர்தான் வேட்பாளராக வரவேண்டுமென்று சிலருக்கு எண்ணம் இருந்திருக்கலாம். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல், வேறொருவருக்கு தலைமைக் கழகம் அந்த இடத்தை அளித்திருக்கலாம். நாம் நினைத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையே என்று நினைக்கும் பழக்கம் எப்போதும் உனக்குக் கிடையாது. ஆனாலும் யார் நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்காக உழைத்திடுவதுதான் உன்னுடைய கடமை. அதனை நினைவூட்டுவது என்னுடைய கடமை.

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் நம்முடைய அணியிலே இருந்த மதிமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது ஜெயலலிதாவின் அணியிலே இடம் பெற்றுள்ளன. அந்த இரண்டு கட்சிகளைப் பற்றி 2004ம் ஆண்டு தேர்தலின்போது, வாஜ்பாய் முன்னிலையிலே ஜெயலலிதா கூறும்போது- தண்டமாக தமிழகத்தில் மதிமுக என்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வாய்ச் சவடால் வைகோ என்றும்; தடம் புரண்டு பேசும் தத்துவ பச்சோந்திகளாகிய கம்யூனிஸ்டுகள் என்றும் விமர்சித்தார். அவர் விமர்சித்ததை அந்தக் கட்சித் தலைவர்கள் மறந்துவிட்டாலும், நாம் மறக்கவில்லை.

1999ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்த ஆட்சிக்கு ஜெயலலிதா எந்த அளவிற்கு சிரமங்களைக் கொடுத்தார் என்பதையும், ஆட்சி அமைப்பதற்கான பரிந்துரை கடிதத்தைக் கூட எவ்வளவு தாமதப்படுத்தினார் என்பதையும் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

அதுபோலவே வாஜ்பாய் அரசு, திமுக அரசைக் கலைக்க முன்வரவில்லை என்ற காரணத்தினால், மத்திய அரசுக்கு ஜெயலலிதா கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஆட்சியையே கலைத்த வரலாற்றையும் தமிழகம் நன்கறியும்.

ஜெயலலிதா இன்றைய பேட்டியில் மூன்றாவது அணி பற்றி என்னிடம் செய்தியாளர் கேட்டதற்கு, அதை மூன்றாவது கண் என்று நான் கூறியதற்குப் பதில் கூறியிருக்கிறார். மூன்றாவது கண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு இல்லாத ஒன்றாகும். என்றாலும்கூட, மூன்றாவது அணி பற்றி நான் சொன்னதும், சிவபெருமான் நெற்றியிலே உள்ள மூன்றாவது கண் பற்றி ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தால் தவறு செய்பவர்கள் சாம்பலாக்கப்படுவார்கள் என்கிறார் ஜெயலலிதா.

உண்மையிலேயே பெரியார், அண்ணா வழி வந்த பகுத்தறிவுவாதிகள்; "முக்கண்ணை'' நம்புவதில்லை- ஆனால் ஜெயலலிதா; முக்கண்ணை நம்பி; தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்! பாவம் பகுத்தறிவு!

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தினை வரவிடாமல் செய்தவர்கள் யார், அவர்கள் மட்டும் தடுத்திராவிட்டால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாம் கனவு கண்டதும், அண்ணாவும், காமராஜரும் வலியுறுத்தியதுமான அத்திட்டம் நிறைவேறியிருக்குமே, அதற்கு இடைஞ்சல் செய்தவர்கள் யார் என்பதையெல்லாம் மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+