அழகிரி or கயல்விழி Vs பி.ஆர்.பி-கடும் போட்டிக்கு தயாராகும் மதுரை

மதுரை தொகுதியில் போட்டியிட அழகிரி தீவிரமாக உள்ளார். அவரது ஆதரவாளர்களும் அவரை தூண்டி விட்டு வருகின்றனர். மேலும் அழகிரிக்கு வாக்களிக்கக் கோரி ஆங்காங்கே சுவர் விளம்பரங்களையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், அழகிரி தேர்தலில் போட்டியிட்டால் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மதுரையிலேயே முகாமிட்டுவிடுவர் என்பதாலும், இது மற்ற தொகுதிகளில் கட்சியின் பிரச்சாரத்தையும் வெற்றியையும் பாதிக்கும் என்பதாலும் அழகிரிக்கு சீட் தர முதல்வர் கருணாநிதி தயாராக இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உன்னை நம்பி தென் மாவட்டங்களில் 10 எம்பி தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அதில் வென்று காட்டு, ராஜ்யசபா மூலம் உன்னை எம்பியாக்குகிறேன் என்று அழகிரியிடம் கருணாநிதி கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் அழகிரி விட்டுத் தர மறுத்தால் அவரது மகள் கயல்விழிக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், கயல்விழிக்கு மதுரை தொகுதியையே ஒதுக்க வேண்டும் என அழகிரி கேட்பதாகத் தெரிகிறது.
கடந்த தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்த பகுதிகள் தொகுதி மறுசீரமைப்பில் தேனி தொகுதியாக மாறிவிட்டது. இங்கு கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை தோற்கடித்தார் காங்கிரஸ் சார்பி்ல் போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண்.
இம்முறை தேனி தொகுதிக்கு அவர் குறி வைத்துள்ள நிலையில் அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
சமீபத்தில் தேனிக்குச் சென்ற அழகிரி அங்கு நிர்வாகிகளிடம் பேசுகையில், இந்தத் தொகுதியில் நமது கூட்டணி சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டு வந்தார்.
இதையடுத்து திமுக பூத் கமிட்டிகள் வேலைகள் ஜாரூராக நடந்து முடிந்து கட்சியினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். அதே போல மதுரையிலும் பூத் கமிட்டிகளை அமைத்துவிட்ட அழகிரி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.
மதுரையில் அழகிரி போட்டியிட்டால் அவரை எதிர்த்து மிக பலமான வேட்பாளரை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஜாதி பலமும் ஆள் பலமும் பண பலமும் இருந்தால் ஒழிய அழகிரியை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்பதால் இந்த அனைத்து பலமும் கொண்ட பி.ஆர்.பி. பழனிச்சாமித் தேவரை நிறுத்த அதிமுக தி்ட்டமிட்டுள்ளது.
மதுரையை ஒட்டிய கீழவளவில் கிரனைட் வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.பியின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள். சொந்தமாக கப்பல் வைத்து பல நாடுகளுக்கும் கிரனைட் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் அவர் சசிகலாவின் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இதுவரை கட்சி சார்பில்லாதவராகவே உள்ளார்.
இரு வாரங்களுக்கு முன் இவரது மகனின் திருமணம் மதுரையையே அசர வைக்கும் விதத்தில் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்தத் திருமணத்துக்கு மண்டபம் எல்லாம் பத்தாது என்பதால் தமுக்கம் மைதானத்தையே வாடகைக்கு எடு்த்து பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார்.
இந்தத் திருமண விழாவில் அழகிரி பங்கேற்க முடியாவிட்டாலும் மறுநாள் பி.ஆர்.பி. வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தார். அந்த அளவுக்கு எல்லா கட்சியினருடனும் தொடர்பில் இருப்பவர் பி.ஆர்.பி.
அதே போல கடந்த வாரம் ராமஸேவரத்தில் ஜெயலலிதாவின் வெற்றிக்காக ஆருத்ர யாகம் நடத்திய சசிகலா மதுரைக்கு வந்து பி.ஆர்.பி. வீட்டுக்குச் சென்றார். திருமணத்துக்கு வர முடியவில்லை என்று சொல்லி மணமக்களை வாழ்த்திய சசிகலா, அப்படியே அதிமுக சார்பில் போட்டியிடுமாறு பி.ஆர்.பியிடம் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், நான் எந்தக் கட்சியையும் சாராமல் தொழில் நடத்தி வருகிறேன். எத்தனைத் தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் பணம் செலவிடத் தயார். ஆனால், என்னை கோதாவில் இறக்கிவிட்டு விடாதீர்கள். குறிப்பாக அழகிரிக்கு எதிராக நான் நிற்கத் தயாராக இல்லை என்று சசிகலாவிடம் பவ்யமாகத் தெரிவி்த்துவிட்டார் பி.ஆர்.பி என்கிறார்கள்.
மேலும் அவரே அழகரியை எதி்ர்கொள்ள மதுரையில் சரியான ஆள் சுப்பிரமணியம் சுவாமி தான். அவரை நிறுத்தலாமே என்றும் ஐடியா தந்ததாக சொல்கிறார்கள்.
கிரனைட் தவிர மினி பஸ்கள், லாரி தொழில்கள் என பரந்து விரிந்த சாம்ராஜ்யம் கொண்ட பி.ஆர்.பியின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையே பல ஆயிரம். இவர்கள் குடும்பங்கள் வாக்களித்தாலே சுமார் 50,000 வாக்குகள் விழுந்துவிடும் என்கிறார்கள் பி.ஆர்.பியின் பலம் தெரிந்தவர்கள்.
கூடவே மதுரை மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் வசிக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பி.ஆர்.பியை கைவிட மாட்டார்கள் என்பது சசிகலாவின் கணக்கு.
மேலும் பண பலத்தில் அழகிரியைவிட பல மடங்கு பணம் பலம் கொண்டவர் என்பதால் இவரே சரியான சாய்ஸ் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நினைக்கிறார்.
இதனால் அவரை தன்னை சந்திக்க அழைத்து வரும் அசைன்மெண்ட்டை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதா தந்தார். ஆனால், பி.ஆர்.பி. நழுவிக் கொண்டே இருப்பதால் சசிகலாவே நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.
உண்மையிலேயே அழகிரி போட்டியிட்டு எதிர் தரப்பில் பி..ஆர்.பி நின்றால் மதுரையில் அனல் மட்டுமல்ல தீப்பொறியே பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications