40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது,

2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உங்களுடைய அணி 40 இடங்களையும் வென்றது. அதுபோல இந்த தேர்தலிலும் வெற்றி கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குக் கருணாநிதி, கூட்டணியை மிகவும் எச்சரிக்கையோடு அமைத்து வருகிறோம். வேட்பாளர்கள் தேர்வு - பிரச்சார முறை - போன்ற வியூகங்களை மிகவும் சிந்தித்து உருவாக்கி வருகிறோம்.

தற்போதுள்ள தேசிய நிலை - மாநில சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது 2004-ம் ஆண்டில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அதிகபட்ச நன்மைகளை பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். துறைமுகம் தொடங்கி விமான நிலையங்கள் விரிவாக்கம் வரை பல்வேறு முனைகளிலும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற அரசே மிகவும் பொருத்தமானது என்பதை மக்களுக்கு விளக்குவோம். மதவாத சக்திகளின் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இல்லை என்றால் மதவாத சக்திகளின் கையில் அரசு அதிகாரம் சென்றுவிடும் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

மக்களுடைய மனோபாவத்தை முழுமையாக பார்த்தால் அரசுக்கு எதிரான மனநிலை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சிறிதும் இல்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

ஈழப் பிரச்சினை எதிரொலிக்காது..

ஈழத் தமிழர் பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, இருக்கும் சூழ்நிலையில் எங்களால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த பிரச்சினை தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் ஆற்றியிருக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையை ராணுவ ரீதியாக தீர்க்க முடியாது; அந்த பிரச்சினையை அமைதியான, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டுமேயன்றி போர் மூலமாக அல்ல; போர் நடைபெற்று வரும் பகுதிகளில் உடனடியாக ஜனநாயக ரீதியான சகஜநிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் மத்திய அரசு செயல்முறைகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்து மக்களும், இலங்கை தமிழர்களும், உலக தமிழர்களும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்வை பற்றி தமிழ்நாட்டில் மற்ற எந்த அரசியல் கட்சிகளையும் விட தி.மு.க.தான் மிகுந்த அக்கறை எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நன்கறிவார்கள். 1956-ம் ஆண்டில் இருந்து தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் - நடத்திய போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் - செய்த தியாகங்கள் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. அதைப்போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையான வேண்டுகோளை விடுக்கலாம், அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தை கொடுக்கலாம், அரசியல் சட்டரீதியாக இருந்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் தெளிவாகவே அறிவார்கள் என்றார்.

விலைவாசி உயர்வும் பாதிக்காது..

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒட்டுமொத்த பண வீக்கத்தை குறைப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. பணவீக்கம் குறைந்ததின் காரணமாக வாங்கும் சக்தி பெருமளவிற்கு பாதிக்கப்படவில்லை.

சராசரி குடும்பங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் - துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சமையலுக்கான மளிகைப்பொருட்கள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டம் - ஆகியவற்றை அமல்படுத்துவதின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்.

விலைவாசி ஏற்றத்தில் இருந்து ஏழை நடுத்தர குடும்பங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்றார்.

சேது திட்டம் ஒரு சாதனை..

தென் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய சேது சமுத்திர திட்டம் பிரமாண்டமான திட்டம் மாத்திரமல்ல; தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜரும் இந்த திட்டத்தை ஆதரித்து பிரசாரமே செய்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே சொல்லப்போனால் சேது சமுத்திர திட்டம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய திட்டமாகும். இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. இத்திட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு சிலர் மதவாத மற்றும் கற்பனை காரணங்களின் அடிப்படையில் எதிர்க்க தொடங்கினார்கள். தற்போது இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் இருந்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை சேது சமுத்திர திட்டம் மாத்திரமல்ல; அதைப்போல பல சாதனைகள் நடைபெற்றிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டு காலத்தில் மத்திய அரசின் சாலை மற்றும் துறைமுக துறையின் மூலமாக தமிழகத்தில் சாலைகள் அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல், கப்பல் தளங்கள் உருவாக்குதல், துறைமுக மேம்பாடு போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக மட்டும் 56,664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு தமிழகத்தில் இவ்வளவு பெரிய சாதனை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏற்பட்டது கிடையாது.

தமிழகத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த மிகப்பெரிய பரிசாகும் இது. இதைப்போல தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்களின் பட்டியல் நீளமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கைகள், கடுமையான சட்டங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது காங்கிரஸ் பயங்கரவாதம் பற்றி மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது.

பிரசாரத்திற்குப் போவேன்..

பிரசாரத்திற்குப் போவீர்களா என்ற கேள்விக்கு,

என்னுடைய கழக உடன் பிறப்புகள் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவர்கள். நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களையும் - என்னுடைய அறிக்கைகளையும் முழுமையாக படிப்பவர்கள். அவர்களது சிந்தனைக்கும், உணர்வுக்கும் நான் மிகவும் நெருக்கமானவன். அவர்கள் தேர்தல் முறைகளில் நல்ல பயிற்சி பெற்றிருப்பவர்கள்.

மருத்துவர்கள் எனக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவார்கள். தேர்தல் பிரசாரத்தை நான் மேற்கொள்வேன், பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

தொங்கு பாராளுமன்றம் வருமா..

இந்தக் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், நல்லவையே நடக்குமென்று நம்புவோமாக. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தெளிவான வெற்றியை இந்திய நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். ஹேஷ்யங்களைப்பற்றி விவாதித்திட இப்போது நான் விரும்பவில்லை என்றார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படுமானால் தி.மு.க. என்ன செய்யும் என்று கேட்டபோது, யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நாங்கள் காங்கிரசோடு இருப்போம், இருவரும் சேர்ந்தே முடிவெடுப்போம் என்றார்.

பாமகவை திருப்திப்படுத்த முடியவில்லை..

நான் சாதாரணமானவன். ஆனால் பாமகவினரின் தேவைகள் அதிகம். எனவே அவர்களை எங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை என்றார் பாமக குறித்த கேள்விக்கு.

குடும்ப அரசியல்...

இது கேட்டு கேட்டு புளித்துப்போன கேள்வி. பலமுறை இதற்கு நான் பதிலளித்து விட்டேன். குற்றச்சாட்டு குறுகிய மனப்பான்மை கொண்டது, தீய நோக்கம் கொண்டது, குறும்புத்தனமானது.

இந்திய நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போல வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் என் குடும்பம் மாத்திரம் சில பேருக்கு துருவ நட்சத்திரமாக தெரிகிறது என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+