லாகூர் தாக்குதல்-தாலிபான் பொறுப்பேற்பு
லாகூர்: லாகூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தாங்கள் தான் அரங்கேற்றியதாக தாலிபான் இயக்கத் தலைவர் பைதுல்லா மெக்சூத் தெரிவித்துள்ளார்.
லாகூரில் இம்மாதம் 3ம் தேதி கிரிக்கெட் விளையாட வந்த இலங்கை வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சோகம் மக்கள் மனதைவிட்டு முழுமையாக நீங்காத நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு லாகூரில் உள்ள மனவன் போலீஸ் அகாடமிக்குள் நுழைந்த 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருந்து 12 கிமீ., தூரத்தில் தான் அகாடமி இருக்கிறது. தீவிரவாதிகளில் போலீஸ் அகாடமியின் இரண்டு பக்கத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் போலீஸ் உடை அணிந்து, துப்பாக்கி ஏந்தி வந்ததால் யாருக்கும் முதலில் சந்தேகம் ஏற்படவில்லையாம்.
வந்த 10 தீவிரவாதிகளில் 8 பேர் வெடிகுண்டுகளை வீசிக்கொண்டே போலீஸ் அகாடமிக்குள் நுழைந்தனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சராமாரியாக சுட்டனர். பின்னர் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இதில் 27 போலீசார் மரணமடைந்தனர். 98 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் மற்றும் துணை ராணுவ படையின் தீவிர முயற்சியால் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 6 பேர் உயிருடன் பிடிபட்டனர். இதையடுத்து இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.
அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இருவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தினர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைபகுதியில் இதற்கான சதி திட்டத்தை திட்டியுள்ளனர் என்றும், அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பயிற்சி கொடுத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என தலிபான் இயக்கத் தலைவர் பைதுல்லா மெக்சூத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் உள்விவகார துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், தீவிரவாத இயக்கங்களின் ஆதிக்கம் பாகிஸ்தானில் அதிகரித்துவிட்டது. இது பாகிஸ்தானின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கும் விளைவிக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றார் ரஹ்மான் மாலிக்.


Click it and Unblock the Notifications
