2 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாத கருணாநிதிக்கு சி்க்கல்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றக் கலவரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது போல இரு காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாமல் உள்ள தமிழக அரசு மீதும், தமிழக முதல்வர் மீதும் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சிங்காரவேலன் என்ற வக்கீல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி மாதம் 19ம் தேதி வழக்கில் ஆஜராகுவதற்காக ஐகோர்ட்டு வளாகத்திற்குள் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நூலகத்தில் காத்திருந்தேன்.
அப்போது, கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி உத்தரவின்பேரில், போலீசார் வக்கீல்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இதில் நானும் தாக்கப்பட்டு காயம் அடைந்தேன்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதை கடைப்பிடிப்போம் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் வழங்கிய இந்த உத்தரவாதத்தை அமல்படுத்தவில்லை. இதுவரை 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்யவில்லை.
உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதிக்கவில்லை. ஆகவே, உத்தரவை அமல்படுத்தாததால், முதல்வர் கருணாநிதி, தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் எஸ்.மாலதி ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதிபதிகள் முகோபாத்தியா, வி.தனபாலன், கே.சந்துரு ஆகியோர் முன்பு இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதே பெஞ்ச்தான் உயர்நீதிமன்றக் கலவரம் தொடர்பான வழக்கையும் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications