ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்திற்கு இந்தியாவே காரணம் - இலங்கை அரசியல் தலைவர்
கொழும்பு: ஈழத் தமிழர்கள் இன்று சந்தித்து வரும் அவலத்திற்கு முழுக் காரணம் இந்தியாதான். இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்று ராஜபக்சே செயல்படுகிறார் என இலங்கை இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண கூறியுள்ளார்.
மேலும், இலங்கை ராணுவ தளபாட உதவிகளை மட்டுமன்றி ஆலோசனைகளையும் இந்தியாவே வழங்கி வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஈழத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டுள்ள மனிதப் பேரவலங்களுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பாகும். ராணுவ மற்றும் ஆயுதங்கள் உட்பட போர் தொடர்பான ஆலோசனைகளையும் மகிந்த அரசுக்கு இந்தியா வழங்கி வருகின்றது.
மகிந்த ராஜபக்ச இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்று செயற்பட்டு வந்திருக்கின்றார்.
இன்று வெற்றி மயக்கத்தில் இருக்கும் இந்திய மற்றும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சோதனைக் காலம் நெருங்கிவிட்டது.
நெப்போலியனின் வீழ்ச்சி செர்பியா என்ற சிறிய தீவின் வீழ்ச்சியுடன் தொடங்கியது. அதுபோல தமிழ் மக்களுடைய எழுச்சி சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல; இந்திய ஆட்சிக்கும் வீழ்ச்சியைக் கொடுக்கும் படலம் தொடங்கி விட்டது.
தென்னிந்திய தமிழர்களின் எழுச்சி நிச்சயமாக இந்திய ஆட்சியாளர்களை மண் கவ்வச் செய்யும். இந்திய, சிறிலங்கா ஆட்சியாளர்களின் வீழ்ச்சி தமிழர்களின் எழுச்சியுடன்தான் தொடங்க போகின்றது.
தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்தவர்கள், சூழ்ச்சி செய்தவர்களின் வீ்ழ்ச்சி எம் கண்முன்னே தெரியப் போகின்றது என்று கூறியுள்ளார் கருணாரட்ண.












Click it and Unblock the Notifications