மேனன்-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
அப்போது 2 நாள் போர் நிறுத்தம் என்பது போதாது, நிரந்தர போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என தமிழ் எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் கொண்ட குழு இரா. சம்பந்தன் தலைமையில், மேனனை நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக விளக்கினர்.
பிரதமரின் இல்ல அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்தக் குழுவில் சம்பந்தன் தவிர சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
வன்னி நிலைமைகள், மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பாக விளக்கிக்கூறிய சம்பந்தன், உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கம் கொடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் அதனால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த சம்பந்தன், இந்தக் காலப்பகுதியில் மட்டும் 200 அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதனால் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டரை லட்சம் மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மிகக்குறுகிய பகுதியான பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.
அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலைமையில் அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. உடனடியாகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் இந்தப் பகுதியில் உள்ள தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
இதனால் சிறிலங்கா படைகள் மேற்கொண்டுவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய வெளிவிவகாரத்துறை செயலரிடம் வலியுறுத்தினோம்.
மேனனுடனான சந்திப்பு மனநிறைவளிக்கும் வகையில் அமைந்திருந்தது. சந்திப்பின்போது பேசப்பட்டவை குறித்து வெள்ளிக்கிழமை விரிவாக செய்தியாளர்களிடம் தெரிவிப்பதாக சம்பந்தன் தெரிவித்தார்.
முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் இக்குழுவினர் சந்தித்துப் பேசினர்.
விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான ஒரு குழுவை அழைத்து இந்திய அரசு பேசியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென கவலைப்படும் பிரணாப்:
இந் நிலையில் இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது என வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளிடம் பேசிய அவர்,
இலங்கை நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாகவும், ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாதுகாப்பை ராஜபக்சே அரசு உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தேவையான முயற்சிகளை இந்திய எடுத்து வருகிறது என்றார்.













Click it and Unblock the Notifications