ப.சிதம்பரம்-மனைவி பெயரில் ரூ. 20 கோடி சொத்து
சிவகங்கை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ. 20 கோடி சொத்து இருப்பதாக கணக்கு தெரிவித்துள்லார்.
சிவகங்கை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ப.சிதம்பரம் தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்திற்கு ரூ. 10 கோடிக்கு மேலும், அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு ரூ. 11.40 கோடி அளவிலும் சொத்துக்கள் உள்ளன.
கர்நாடகத்தில் காபி எஸ்டேட்...
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ரூ. 85.18 லட்சம் மதிப்பிலான காபி எஸ்டேட் ப.சிதம்பரம் பெயரில் உள்ளது.
ரொக்க் கையிருப்பு ரூ. 2.5 லட்சம். வங்கி முதலீடுகள் ரூ. 3.33 கோடி.
பிற சொத்துக்களின் மதிப்பு ரூ. 5.3 கோடி.
ரூ. 5.74 லட்சம் மதிப்பிலான பான்ட், ஷேர்கள் உள்ளன. நிதி நிறுவன முதலீடுகள் ரூ. 4.32 லட்சம்.
ரூ. 4.73 லட்சம் மதிப்பில் ஒரு போர்ட் பியஸ்டாவும், ரூ. 6.57 லட்சத்தில் ஒரு ஸ்கோடா காரும் உள்ளன. ரூ. 89 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் அவரது பெயரில் உள்ளன.
தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் மனைவி நளினி பெயரில் ரூ. 11.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
வங்கியில், ரூ. 3.26 கோடி இருப்பு உள்ளது. ரூ. 52 லட்சம் மதிப்பிலான பான்ட், ஷேர்கள் உள்ளிட்டவை உள்ளன.
ரூ. 7.62 கோடி மதிப்பிலான நிலங்கள், வர்த்தக கட்டடங்கள் உள்ளன.
அமைச்சருக்கு அனுமதி மறுப்பு:
முன்னதாக சிவகங்கையில் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது உடன் வந்த அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மூன்று கார்களில் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கூடுதலாக வரும் கார்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் இருந்த 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும்.
இந்நிலையில் சிதம்பரம் அமைச்சராக இருப்பதால் அவரது காருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் வந்தன. அதன் பின்னர் சிதம்பரத்தின் மனுவை முன்மொழிவதற்காக பெரிய கருப்பன் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தங்களது கார்களில் வந்தனர்.
ஆனால், பெரியகருப்பன் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் கார்கள் கலெக்டர் அலுவலக 'ஆர்ச்' முன் தடுத்து நிறுத்தப்பட்டன. மூன்று கார்களுக்கு அனுமதி இருப்பதால் தனது காரை உள்ளே அனுப்ப வேண்டும். சிதம்பரத்துடன் சென்றது பாதுகாப்பு வாகனங்களை கணக்கில் சேர்க்க கூடாது என டிஎஸ்பி சாம்சனிடம் பெரியகருப்பன் கூறினார்.
ஆனால் அவர் அனுமதி மறுத்துவிட்டார். இந்த பிரச்சினையை அறியாத சிதம்பரம் கலெக்டர் அலுவலகத்துக்குள் இருந்து பெரிய கருப்பனை தனது மொபைலில் உள்ள வருமாறு அழைத்தார். ஆனால், பெரியகருப்பன் நிலைமையை விளக்க பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசி அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
சிதம்பரத்தின் வேட்புமனுவை முன்மொழிந்துவிட்டு பெரிய கருப்பன் தேர்தல் அதிகாரி பங்கஜ்குமார் பன்சாலிடம் டிஎஸ்பி மீது புகார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications