'ஹெலிகாப்டர்': என்னை கொல்ல சதி-அனில் அம்பானி

அவர் பயணம் செய்யவிருந்த ஹெலிகாப்டரின் கியர் பாக்ஸில் கூழாங்கற்களும், களிமண்ணும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது அனில் அம்பானியையும், அவரது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளையும் கொல்ல நடந்த சதி இது என அனில் திருபாய் அம்பானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று காலை அனில் அம்பானி மும்பையிலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்யவிருந்தார். ஆனால் ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அதில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரின் கியர் பாக்ஸை சோதனையிட்டபோது அதில் கூழாங்கற்கள், களிமண் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. இந்த பொருட்களுடன் ஹெலிகாப்டர் தொடர்ந்து பறந்திருந்தால் நிச்சயம் பேராபத்தில் முடிந்திருக்கும்.
ஹெலிகாப்டரின் உள் பகுதியில் இதை செய்திருப்பதால், இது சதிச் செயல் என அனில் அம்பானி நிறுவனம் கூறுகிறது.
அதேசமயம், அனில் அம்பானியின் ஹெலிகாப்டருக்கு அருகே நின்று கொண்டிருந்த மற்ற 7 ஹெலிகாப்டர்களிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அனில் அம்பானி பயணம் செய்யவிருந்த பெல் 412 ரக ஹெலிகாப்டரை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து வரும் ஏர்வொர்க்ஸ் பிரைவேட் நிறுவனம், அந்த சமயத்தில் பணியில் இருந்தவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் 4 ஊழியர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மரணம் அல்லது உடல் காயத்தை உருவாக்கும் வகையில் தீய நோக்கத்துடன் செயல்பட்டதாக 44வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோம்நாத் குகே கூறுகையில், நான்கு பேரை கைது செய்துள்ளோம். அவர்கள்தான் சம்பவம் நடந்தபோது ஷிப்ட் முறையில் பணியில் இருந்தவர்கள். இந்த செயல் மிகவும் விஷமத்தனமான குற்றம்.
ஏர்வொர்க்ஸ் நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக இந்த சதிச் செயலில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.
இருப்பினும் இது தொழில் போட்டியாளர்களின் சதி என அனில் அம்பானி நிறுவனம் கூறுகிறது.
அனில் அம்பானியின் ஹெலிகாப்டரில் ஏற்படுத்தப்பட்ட இந்த பயங்கர சதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications