Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சேவுடன், மேனன், நாராயணன் 'இதயபூர்வ' சந்திப்பு - போர் நிறுத்தம் குறித்து பேசாமல் திரும்பினர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெரும் பரபரப்பாக கிளம்பிப் போன எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வழக்கம் போல இதயப்பூர்வமாக பேசி விட்டு வேகமாக டெல்லி திரும்பி விட்டனர். தப்பி வரும் தமிழர்களுக்கு மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று மட்டும் கூறியுள்ளனராம். போர் நிறுத்தம் குறித்து இருவருமே ராஜபக்சேவை வலியுறுத்தவில்லையாம்.

எதிர்பார்த்ததைப் போலவே எந்த பயனும் இல்லாமல் முடிந்துள்ளது மேனன், நாராயணன் பயணம். இவர்களது பயணத்தால் இலங்கையின் ராணுவ நடவடிக்கையில் எந்த மாற்றமும் வராது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரணம், இருவருமே ராஜபக்சேவிடம் வழக்கம் போல மட்டுமே பேசியுள்ளனர். தப்பி வரும் தமிழர்களுக்கு மறு வாழ்வு நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள் என்றுதான் இருவரும் வலியுறுத்தினார்களாம். சிக்கிக் கொண்டுள்ள 2 லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என இருவருமே வலியுறுத்தவில்லையாம்.

இந்த சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்ததாக வேறு இலங்கை அதிபர் மாளிகை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு அலை எழுந்ததைத் தொடர்ந்து தேர்தலில் பெரும் பாதகம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் வேகம் வேகமாக மேனனையும், நாராயணனையும் மத்திய அரசு நேற்று கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் இருவரும் கிளம்பிப் போவதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கை விடுத்தார். அதில், அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவது கவலை தருகிறது. நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. உடனடியாக இவை நிறுத்தப்பட வேண்டும் என சற்று கடுமையாகவே கூறியிருந்தார்.

இதனால் இந்த இரட்டைத் தூதர்களும் போய் போரை நிறுத்துமாறு ராஜபக்சேவை வலியுறுத்தலாம் என்ற லேசான எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் நேற்று கொழும்பு சென்ற இரு தூதர்களும், ராஜபக்சேவை சந்தித்து சுமார் 90 நிமிடங்கள் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது போரை உடனடியாக நிறுத்துங்கள் என்று ஒருமுறை கூட இவர்கள் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, இடம் பெயர்ந்து வந்திருக்கும் தமிழர்களுக்கும், போர்க்களத்திலிருந்து வரும் தமிழர்களுக்கும் உரிய மறு வாழ்வு நடவடிக்கைகளை எடுங்கள். அப்பாவிகள் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று மட்டும் சொன்னதாக கூறப்படுகிறது.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அக்கறையுடன் அவர்கள் ராஜபக்சேவிடம் கேட்டுக் கொண்டனராம்.

இந்தியத் தூதர்களின் சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்ததாக அதிபர் மாளிகை பின்னர் தெரிவித்தது.

வெற்றிகரமாக தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் இரவே டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பியதும் ஏற்கனவே எழுதி வைத்த ஒரு அறிக்கையை நாராயணன் வாசித்தார்.

அதில், இலங்கை நிலவரம் குறித்த இந்தியாவின் கவலையை அதிபரிடம் தெரிவித்தோம். எங்களது பயணத்தின் விளைவாக சாதகமான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்படுவது குறித்தும் விவாதித்தோம் என்றார்.

ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது, இந்தியத் தரப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத், இலங்கை தரப்பில் கோதபாய ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று ராஜபக்சேவிடம் கூறியதாக மேனனோ, நாராயணனோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பயணம் மேலும் ஒரு கண் துடைப்புப் பயணமாகவே மாறியுள்ளது. அப்பாவித் தமிழர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்தப் பயணம் தவறி விட்டதாகவே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+