திமுக பிரமுகர் வெட்டி கொலை-உட்கட்சி பூசலா?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலைக்கு உட்கட்சி பூசல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் 40வது வட்ட திமுக செயலாளராக இருந்தவர் சீனிவாசன் (56). இவர் கொய்யாகுளம் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சீனிவாசன் தினமும் அதிகாலையில் எழுந்து சந்தைக்கு காய்கறி வாங்க செல்வது வழக்கம். இன்று அதிகாலையும் 5 மணிக்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றார்.
அவர் கொய்யாகுளத்தை அடுத்துள்ள ஆஞ்சனேயர் கோவிலை தாண்டியவுடன், அப்பகுதியில் ஒளிந்திருந்த மர்ம குமப்ல் அவரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் அவரை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டத் துவங்கியது.
இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் சரிந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த மர்ம கும்பல் அவர் தலையில் இரண்டு பாறாங்கற்களை தூக்கி போட்டனர். இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலே தலை நசுங்கி துடிதுடித்து அகோர மரணமடைந்தார்.
பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. விடிந்ததும் அந்த பகுதியாக வந்தவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கீழே கிடந்த வண்டியை வைத்து போலீசார் அது சீனிவாசன் என்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனிவாசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி பிரமுகர் ஒருவருக்கும் பல காலமாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக இருவருக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டதாகவும் போலீசாரின் விசாரணையி்ல் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்ய்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த பிரமுகர் தலைமறைவாகி இருப்பது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications