சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில்-சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.
முன்பே கிளம்பிய ரயில்...

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர்.

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல்...

இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

குதித்து தப்பிய டிரைவர்கள்...

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர்.

அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பற்றி எறிந்த தீ...

இதில் பயணிகளின் ரயிலின் மூன்று பெட்டிகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. பயணிகள் ரயிலில் இருந்த 6 பேர் பலியாயினர். ரயிலை இயக்கிய நபரும் பலியானார். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் ரயில் பெட்டிகளில் இருந்த 6 பயணிகளின் உடல்களை மீட்டனர்.

மேலும் காயமடைந்த 14 பேரையும் மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டேங்கர் ரயிலில் டீசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இயக்கியது தீவிரவாதியா?....

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

யில்கள் மோதிய சத்தம் வியாசர்பாடி சுற்று வட்டாரத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்டுள்ளது.

வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்..

அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக பெரம்பூர் வழியாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் சென்னையிலிருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி வழியாக செல்லும் ரயில்கள் ஆகியவை நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் மங்களூர் எக்ஸ்பிரஸ் வில்லிவாக்கத்திலும், எர்ணாகுலம்-பாட்னா எக்ஸ்பிரஸ் அம்பத்தூரிலும் , ஆலப்புழா எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகிவை ஆவடியிலும், மைசூர் எக்ஸ்பிரஸ் திருவான்மியூரிலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவள்ளூரிலும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மூர்மார்கெட்-ஆவடி மார்க்கத்தில் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில் சேவைகளும் பகல் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தாமதமாகக் கிளம்பிய ரயில்கள்...

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 5 ரயில்கள் த‌ாமதமாக புறப்பட்டன. மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், ‌பெங்களூர் பிருந்த‌ாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆகியவை தாமதமாக சென்றன.

இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) ஜெயந்தன் கூறுகையில், ரயிலை இயக்கியது யார் என்று தெரியவில்லை. பயணிகள் ரயில் 25 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டு தவறான பாதையில் சென்று காலியான டேங்கர் ரயில் மீது மோதியுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் அடையாளம் மட்டும் தெரிய வந்துள்ளது. அவர் ஆவடியை சேர்ந்த மோகன் ராஜ் என்பவர் ஆவார்.

தகவல் உதவிக்கு தொலைபேசி எண்கள்...

இந்த விபத்து குறித்து தகவல் பெற 044-25357386, 044-25357398 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

விசாரணைக்கு லாலு உத்தரவு:

இந்த சம்பவம் குறித்து துறைரீதியான முழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+