பஸ் கட்டணம் குறைப்பு விதி மீறலே-நரேஷ் குப்தா

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் சில பஸ் சேவைகளில் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தொலைபேசி வாயிலாகவும், பேக்ஸ் மூலமாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இது நிச்சயமாக, தேர்தல் விதிமுறையை மீறிய செயல் ஆகும். இதை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயமாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இது பற்றி தமிழக அரசிடம் விளக்கம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
முன்பு வழங்கப்பட்டு வந்த இலவச வேட்டி-சேலை, இலவச கலர் டிவி போன்றவை தேர்தல் ஆணைய நடவடிக்கையால் நிறுத்தப்பட்டதுபோல, பஸ் கட்டண குறைப்பும் திரும்பப் பெறப்படலாம்.
தமிழகத்தில் தேர்தலின்போது, மொத்தம் 1.08 லட்சம் மின்னணு இயந்திரங்கள் உபயோகிக்கப்படும். இதற்காக ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்தும், பெல் நிறுவனத்தில் இருந்தும், மொத்தம் 35,836 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குறுகிய காலத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்தன. இதில் மிக அதிகமாக, மதுரையில் இருந்து வந்த 1.2 லட்சம் மனுக்களை பரிசீலித்ததில், 15,000 முதல் 20,000 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட பெயர்களுடன் கூடிய வாக்காளர் துணை பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சிகள் தரும் பூத் ஸ்லிப்களில், வேட்பாளரின் பெயர், கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னம் போன்றவை இடம்பெறக் கூடாது. எந்த ஒரு வாசகமும் அதில் இருக்கக்கூடாது. வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே, இந்த ஸ்லிப்புகளை வினியோகிக்க வேண்டும்.
இதில் உள்ள எழுத்துகள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் மட்டுமே அச்சிடப்படவேண்டும்.
பூத் ஸ்லிப்பை வெள்ளைத் தாளில் மட்டுமே தரவேண்டும். அதில், வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் வரிசை எண், தேர்தல் தேதி, போன்றவை மட்டுமே இருக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களில் மின்சாரம் திருடப்படுவது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. இது போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குண்டான செலவினை வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்த்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் முதல்வரின் படம் அச்சிட்ட பாக்கெட்டுகளில் பொருள்கள் வழங்குவதாக புகார் வந்துள்ளது. அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் இங்கு பிரசாரம் செய்து கொண்டிருப்பது தொடர்பாக சட்டரீதியாக ஆராய்ந்துதான் சொல்ல முடியும் என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications