பணம் தந்த திமுக - பிடித்த அதிமுக மதுரையில் போராட்டம்-அமளி
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த திமுகவினரை, அதிமுகவினர் வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் மூண்டன. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமு கூட்டணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் திமுக சார்பில் முதல்வரின் மகன் மு.க.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மோகன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் அழகிரிக்கும், மோகனுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
மு.க.அழகிரியின் வெற்றியை உறுதி செய்ய மதுரை திமுகவினர் படு தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் அதிமுக தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஆங்காங்கே உரசல்களும் ஏற்பட்டவண்ணம் உள்ளது.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மாறி மாறி தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பியவண்ணம் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் நேற்று ஒத்தக்கடை, செல்லூர், கரிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் வீடு வீடாக சென்று பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சியினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, வளர்மதி ஜெபராஜ் தலைமையில் அதிமுகவினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விரைந்தனர்.
எங்கெல்லாம் பணம் கொடுத்தார்களோ அங்கெல்லாம் சென்று வளைத்து வளைத்து திமுகவினரை கையும், கவருமாக பிடித்தனர். ரூ. 500 பணம் கவர்களில் வைத்துக் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அலாவுதீன், முஸ்தபா என்ற 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த ரூ.16 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
மதுரை ஒத்தக்கடை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பூவலிங்கம், முருகன், அய்யனார், ராஜாசேர்வை, பூமிநாதன், முருகேசன் ஆகியோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காளிதாஸ் பிடித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.
அவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அவர்கள் 221 கவர்களில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 20 பேரைப் பிடித்து போலீஸாரிடம் அதிமுக கூட்டணியினர் ஒப்படைத்தனர். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் திமுகவினர் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 15 பேரை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பெரியார் பேருந்து நிலையம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் அதிமுக கூட்டணியினர் குதித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த திமுகவினர், அதிமுக கூட்டணியினரைக் கத்தியால் குத்தியவர்கள் ஆகியோரைக் கைது செய்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என அதிமுக கூட்டணியினர் கூறினர்.
இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் நந்தகோபால் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் பல மணி நேரம் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications