திமுக-காங் 40 இடங்களிலும் வெல்லும்: ஜெயந்தி
சென்னை: திமுக-காஙகிரஸ் கூட்டணிக்கு தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பெரும் வெற்றி கிடைக்கும். எங்களுக்கு அப்படித்தான் தகவல்கள் வருகின்றன என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு பல உதவிகளை செய்துள்ளது. உணவு, உடை, மருத்துவ வசதிகளை அளித்துள்ளோம். பிரதமரின் தலையீட்டால் போர் நிறுத்தத்தையும் உண்டாக்கினோம்.
அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். எனவே இந்த தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். எங்களுக்கு அப்படித்தான் தகவல்கள் வருகின்றன.
தமிழக மக்கள் நலனுக்காக தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். எனவே வெற்றி வாய்ப்பு எங்கள் கூட்டணிக்கு பிரகாசமாக உள்ளது.
நடிகர்கள், இயக்குனர்கள் எதிர் பிரசாரம் செய்வதற்கு ஜனநாயக நாட்டில் தடை எதுவும் இல்லை. முதலில் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பிரச்சினை என்ன என்பதை முதலில் பேச வேண்டும். இலங்கை பிரச்சினை பற்றி பேசி அரசியல் ஆக்குவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் காங்கிரசில் இருந்து காப்பி அடித்ததுதான். வெளியுறவு கொள்கைகளை பொறுத்தவரை அண்டை நாடுகளுடன் மத்திய அரசு சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது கூட அதில் பிடிபட்டவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று நாங்கள் சொன்னபோது அதை ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தோம்.
ஆனால் பாஜக அரசு பதவியில் இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் முஷரப் பாதியிலேயே கோபித்து கொண்டு சென்றுவிட்டது எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் விதிமுறை எதையும் மீறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications