ரிலையன்ஸ்-ரிலையன்ஸ் பெட்ரோல் இணைப்பை எதிர்த்து வழக்கு!

அவர் பெயர் அனுப் குமார் சேத். ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்களிலும் இவர் பங்குதாரராக உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, நிதி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், இதில் செபி மற்றும் ரிசர்வ் வங்கி உடனடியாகத் தலையிட்டு இந்த இணைப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அனுப் குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.57000 கோடியை முகேஷ் அம்பானி முதலீடாகச் செய்திருப்பதாகவும், இந்தத் தொகை அவரது வெளிப்படையான வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் அம்மனுவில் அனுப்குமார் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோல் நிறுவனங்களின் கணக்கேடுகளைச் சோதித்தால், பல்வேறு சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும், நீண்ட கால ஒப்பந்தங்கள் என்ற பெயரில் இந்த முறைகேடுகளை முகேஷ் அம்பானி மறைத்திருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்திலிருந்து ஏராளமான பணம் இப்படி ரிலையன்ஸ் நிறுவன கணக்குக்கு மாறறப்பட்டுள்ளதாம்.
இந்த இரு நிறுவனங்களின் உண்மையான மதிப்பினை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் முழுமையான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பிறகே இணைப்பு குறித்து இறுதி முடிவை செபியும், ரிசர்வ் வங்கியும் வெளியிட வேண்டும் என்று அனுப்குமார் சேத் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரு நிறுவனங்களையும் இணைப்பதென கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் பங்குதாரர் கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒரு ரிலையன்ஸ் பங்குக்கு 16 ரிலையன்ஸ் பெட்ரோலிய பங்குகள் என்ற விகிதத்தில் தருவதென அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அனுப்குமார் தொடர்ந்துள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications