'பணம்-படை' காரணம்-ஜெ. வழக்கமான புலம்பல்

தேர்தல் தோல்வியை அடுத்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவை ஜனநாயகத்தை வென்றுவிட்டன. ஜனநாயகம் அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.
இந்தத் தேர்தலில் திமுகவினர் பரவலாக பணப்பட்டுவாடா செய்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றது, பல வாக்கு சாவடிகளை திமுகவினர் கைப்பற்றியது உட்பட பல்வேறு முறைகேடுகளை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டின.
ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதையே இந்த தேர்தல் உணர்த்துகிறது.
வாக்கு எண்ணிக்கையிலும் திமுகவினரின் அராஜகம் தலைவிரித்து ஆடியது. உதாரணமாக, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளிவந்த பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில், சில தில்லுமுல்லு வேலைகள் மூலம் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இல்லை.
இதேபோன்று, விழுப்புரம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற கழக வேட்பாளர்களுக்கான சான்றிதழ்கள் பல மணி நேர இழுத்தடிப்பு போராட்டங்களுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற செயல்களை, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படும் மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவினரின் இவ்வளவு அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மீறி, என் மீது நம்பிக்கை வைத்து, எனது வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications