திமுகவுக்கு 5 அமைச்சர்கள் மட்டுமே!-காங் திட்டம்
டெல்லி: மத்தியில் அரசமைப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தி்ல் சந்தித்துப் பேசினார். வழக்கமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களை சோனியா வெளியில் வந்து வரவேற்க மாட்டார். முதல்வர் கருணாநிதியை சோனியாவும் ராகுல் காந்தியும் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு சோனியாவிடம் ஆலோசனை நடத்திவிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார் கருணாநிதி.
இம்முறை மொத்தம் 80 பேர் கொண்ட அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சி்ங் அமைப்பார் என்று தெரிகிறது. இதில் 40 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 20 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்களாகவும், 20 பேர் இணையமைச்சர்களாகவும் இருப்பர் என்று தெரிகிறது.
இதில் திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 20 அமைச்சர் பதவிகள் தரப்படும் என்று கூறப்படுகிறது. மிச்சமுள்ள 60 இடங்களை தனக்கே வைத்துக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்தமுறை 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் 4 இணையமைச்சர் பதவிகளையும் பெற்ற திமுக இம்முறை 4 கேபினட் பதவிகளையும் 4 இணையமைச்சர் பதவிகளையும் கேட்பதாகத் தெரிகிறது. ஆனால், 2 கேபினட் அமைச்சர்கள், 3 இணையமைச்சர் பதவிகளை மட்டுமே தர முடியும் என காங்கிரஸ் கூறி வருவதாகத் தெரிகிறது.
கடந்த முறையைப் போல எந்தக் கூட்டணிக் கட்சியையும் முழு அளவில் சார்ந்து காங்கிரஸ் இல்லை என்பதால் காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த முறை 147 இடங்களில் மட்டுமே வென்ற இம்முறை 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளதால் தனது கட்சியைச் சேர்ந்த எம்பிக்களுக்கு அதிக அளவில் அமைச்சரவையில் இடம் தர வேண்டியுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. இதனால் மற்ற கட்சிகளுக்கு இடங்களைக் குறைக்க முயல்கிறது.
திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராக்க பிரதமர் விரும்பினாலும் அதை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்தப் பதவியில் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரே இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதனால் இந்தப் பதவிக்கு பிரணாப் முகர்ஜி, கமல் நாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் நீடிப்பார் என்று தெரிகிறது. ஏ.கே.ஆண்டனி பாதுகாப்புத்துறை அமைச்சராக தொடர்வார் என்று தெரிகிறது.
வயதாகி விட்டதால் அர்ஜூன் சிங்குக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படமாட்டாது என்று தெரிகிறது. அவருக்குப் பதில் கபில் சிபல் மனித வளத்துறை அமைச்சராகலாம் என்றும், ஆனந்த் சர்மா ஒளிபரப்புத்துறை அமைச்சராகலாம் என்றும் தெரிகிறது.
முஸ்லீம் தலைவர்களில் குலாம் நபி ஆசாத், சல்மான் குர்ஷித் இருவருக்கும் கேபினட் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை அழகிரி, ராஜா, தயாநிதி மாறன், பாலு ஆகியோருக்கு என 4 கேபினட் பதவிகளையும் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோருக்கு 4 இணையமைச்சர் பதவிகளையும் கேட்கிறது. இதில் கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி கேட்கிறது.
கேபினட் பதவி தராவிட்டால் பாலுவை சபாநாயகராக்க வேண்டும் என்றும் திமுக கோரி வருவதாகத் தெரிகிறது. அதுவும் கிடைக்காவிட்டால் பாலுவுக்கு இம்முறை டெல்லியில் பெரிய பதவி ஏதும் இருக்காது.
முதலில் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்ன திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இப்போது தனக்கு ரயில்வே துறையைக் கேட்பதாகத் தெரிகிறது.
இந்தத் துறையைத் தான் அழகிரிக்காக திமுக கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரயில்வே கிடைக்காத பட்சத்தில் அழகிரிக்கு பாலு வகித்து வந்த தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.
இலாகாக்களைப் பொறுத்தவரை திமுக இம்முறை இன்ட்ரஸ்ட் காட்டும் துறைகள் ரயில்வே அல்லது நெடுஞ்சாலைத்துறை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், நிதி, உள்துறை, சுற்றுச்சூழல் ஆகியவை.
இதில் தான் கேபினட் அல்லது இணையமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறது.
அதே போல தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் தவிர ஜி.கே.வாசனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
இப்போது திட்ட அமலாக்கல் துறை என்று உப்பு சப்பில்லாத துறைக்கு இணையமாச்சராக உள்ளார் வாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர ஜெயந்தி நடராஜனும் கேபினட் அமைச்சர் பதவிக்கு தீவிரமாக முயன்று வருகிறார். மேலும், பாமக தலைவர் ராமதாசின் சம்பந்தியும் அன்புமணியின் மாமனாரான கிருஷ்ணசாமிக்கும இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications