'பிரபாகரன்'-உலகம் முழுதும் தமிழர்கள் போராட்டம்
லண்டன்: பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வெளிவந்ததை அடுத்து உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா என பல நாடுகளிலும் அவர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்ளிட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் இறந்துவிட்டதாக நேற்று இலங்கை ராணுவம் தெரிவித்தது.
ஆனால், பிரபாகரனின் மகன் மற்றும் நடேசன் ஆகியோர் மட்டுமே ராணுவத்தின் சதிக்கு பலியாகிவிட்டதாகவும். பிரபாகரன் நலமாக இருப்பதாகவும் விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் தொடரும் உண்ணாவிரதம்...
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக லண்டன் நாடாளுமன்றத்துக்கு எதிரே தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்துக்கு முன் சுமார் 2500 தமிழர்கள் திரண்டு அமைதியாக போராட்டம் நடத்தினர்.
அவர்கள் இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது எப்படி அடக்குமுறை கையாள்கிறது என்பதை விளக்கும் வகையில் தலையில் கட்டு போட்டும், உடலில் ரத்தம் வடிவது போன்றதும் வேஷமிட்டு வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தை எதிராக உள்ள சாலையில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் என நினைத்த போலீசார் அவர்களை கலைக்க முற்பட்டனர். இதில் ஆறு தமிழர்களுக்கும், மூன்று போலீசாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தமிழர்களின் அமைதி கூட்டத்தை இங்கிலாந்து போலீசார் வானத்தில் ஹெலிகாப்டரில் பறந்தபடியே நோட்டம்விட்டனர்.
நம்ப தயாராக இல்லை...
லண்டன், காட்போர்டு பகுதியில் படிக்கும் குலன் செல்வன் என்ற 32 வயது மாணவர் கூறுகையில், இங்கிருக்கும் தமிழர்களிடையே அதிக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை போர் இன்னும் முடிந்து விடவில்லை. தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற இலங்கையின் அறிக்கைகளை நாங்கள் நம்ப தயாராக இல்லை.
ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்ப்டடுள்ளனர். அங்கு தினமும் சித்ரவதையை அனுபவிக்கும் எங்கள் மக்களுக்காக வருந்துகிறோம். இலங்கை அரசு உலகின் முன்னணி, நடுநிலை மீடியாக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை இதனால் அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது என்றார்.
இலங்கை கொடி எரிப்பு...
சில போராட்டக்காரர்கள் இலங்கை தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தினர்.
ஆஸ்திரேலியாவில்...
அதேபோல் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அரசுகள் இலங்கை விஷயத்தில் தலையிடாமல் இருந்து வருவது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக அவர்கள் கோஷமிட்டனர்.
இது குறித்து போராட்டம் நடத்திய அமைப்பின் செய்தி தொடர்பாளர் லாவன்யா தேவா கூறுகையில், இங்கே இருக்கும் அனைவரும் சமீபத்தில் போரில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்.
அதிபர் ஒபாமா, இலங்கை விஷயத்தில் தலையிட்டு அரசியல் தீர்வு காண்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அமெரிக்க அரசு தமிழ் மக்களுக்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலியாவில் கத்தி குத்து, ஆசிட் வீச்சு...
இந்நிலையில் சிட்னி நகரில் சில சிங்களர்கள் தங்கள் ராணுவத்தின் வெற்றியை பாரமட்டா பூங்காவில் கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் பேஸ்பால் பேட் மற்றும் கோல்ப் பேட்களுடன் போன்றவற்றை கையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் அங்கிருந்த தமிழர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு தமிழர்களுக்கும், சிங்களர்களர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதேபோல் இரு தினங்களுக்கு முன் மேற்கு சிட்னியில் நடந்த மற்றொரு கலவரத்தில் சுமார் 100 பேர் மோதி கொண்டனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் ஒருவரின் வீடு சூறையாடப்பட்டு அவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் இருவர் மீது ஆசிட் வீசப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் அவசரநிலை பிரகடனம்...
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பி்ன் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவராக இலங்கை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நாவின் உகல சுகாதார அமைப்புக்கு முன்பாக தமிழர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று அவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதில் பலர் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் 'எங்கள் தலைவன் பிரபாகரன்', 'ஐ.நா.வே தமிழீழத்தை அங்கீகரி', 'தழிழீழமே எங்கள் நாடு', 'ஐ.நாவே கண்ணைத் திற', 'சுயநிர்ணய உரிமையை அங்கீகரி', 'விடுதலைப் புலிகளே எங்கள் பிரதிநிதிகள்' போன்ற கோஷங்களை முழுங்கினர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு வார காலத்துக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் தொடரும்... கனடா தமிழர்கள்
தமிழகம் மற்றும் இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்வது கனடாவில் தான். தற்போது இங்கிருக்கும் தமிழர்களும் டோரான்டோ நகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்கிருக்கும் தமிழர் அமைப்பை சேர்ந்த விமல் என்ற இளைஞர் கூறுகையில் போர் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவுக்கும், மருந்துக்கும் போராடி வருகின்றனர். தமிழர்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாட்டில் இருந்து வெளிவரும் எந்த செய்திகளும் உறுதியானதாக இருக்காது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications