மீன் வியாபாரியின் மகன் முதலிடம் பிடித்து சாதனை
நாகர்கோவில்: பத்தாவது வகுப்பு பொதுத் தேர்தலில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவர் ஜோஸ் ரிஜானின் தந்தை சைக்கிளில் வீடு வீடாக சென்று மீன் வியாபாரம் செய்பவர் ஆவார். மகனின் சாதனையில் அவர் பெருமிதம் அடைந்துள்ளார்.
500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார் ஜோஸ் ரிஜான்.
குமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள புதிய மரிய கொரட்டி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார் ஜோஸ்.
இவர் தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் தலா 100 என மார்க் எடுத்துள்ளார். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு நூற்றுக்கு நூறு தருவதில்லை என்பதால் இவரால் 500க்கு 500 எடுக்க முடியாமல் போனது.
ரிஜானின் தந்தை பெயர் பயாஸ். இவர் சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தாயார் மார்சலின், அதிமுக கவுன்சிலர் ஆவார்.
ரிஜானுக்கு ஷார்லின் ரிஜான், ஜெரிஷா என இரு சகோதரிகளும், ரீகன் என்ற அண்ணனும் உள்ளனர். ரிஜான்தான் வீட்டில் கடைக் குட்டி.
மணலிக்கரை ஆர்.சி.தெருவில் வசித்து வருகிறது ரிஜானின் குடும்பம்.
தனது சாதனை குறித்து ரிஜான் கூறுகையில்,
எனது தந்தை மீன் வியாபாரம் செய்துதான் என்னை படிக்க வைக்கிறார். இந்த வியாபாரத்தில் பெரிய அளவில் வருமானம் கிடைக்காது. சில நேரங்களில் நஷ்டமும் ஏற்பட்டு விடும்.
இருந்தாலும் அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் எனது மூத்த சகோதரியை பி.எஸ்.சி. நர்சிங் படிக்க வைத்து வருகிறார். அதுபோல் இரட்டை குழந்தைகளாக பிறந்த எனது அண்ணன் ரீகன், அக்காள் ஜெரிஷா ஆகிய இருவரும் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்க வைத்துள்ளார். என்னை எஸ்.எஸ்.எல்.சி. முடிக்க வைத்துள்ளார்.
எனது குடும்ப கஷ்டத்தை பார்த்து நான் விடாமுயற்சியோடு படித்தேன். அதனால் நான் டியூசனுக்கு எதுவும் போகவில்லை. நான் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் டி.வி கேபிள் இணைப்பை எனது பெற்றோர் துண்டித்து விட்டனர்.
இதனால் நான் கடந்த ஒரு ஆண்டாக டி.வி. பார்ப்பதை நிறுத்தி விட்டேன். தினமும் இரவிலும், அதிகாலையிலும் கண்விழித்து படிப்பேன்.
பிளஸ்-1-ல் நான் கணிதம் மற்றும் கம்ப்iட்டர் சயின்ஸ் பாடங்கள் இணைந்த முதல் குரூப்பை எடுத்து படிக்கப்போகிறேன். பிளஸ்-2 தேர்விலும் இதுபோல் மாநில அளவில் ரேங்க் பெற்று, கல்பனா சாவ்லாவைப் போல எதிர்காலத்தில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராகி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் மேற்படிப்பு படிக்க அரசு உதவி செய்தால் இன்னும் அதிகமாக மதிப்பெண்கள் பெறுவேன். பிளஸ்-2 தேர்விலும் மாநில அளவில் முதல் இடம் பிடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications