'மியூசிக்கல் சேர்' ஆன சென்னை கமிஷனர் பதவி!

கடந்த எட்டு ஆண்டுகளில் 9 ஆணையர்களைக் கண்டு விட்டது சென்னை மாநகரம்.
முன்பு இருந்த ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, இப்போது உள்ள முதல்வர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, தொடர்ந்து ஆணையர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே உள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில், சென்னை கமிஷனர் பதவியின் சராசரி ஆயுள் காலம் ஒரு ஆண்டுக்கும் குறைவாகவே உள்ளது.
இது காவல்துறைக்கு நல்லதல்ல என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை ஆணையர் கூறுகையில், ஒரு ஆணையர் பதவியேற்ற பின்னர் அந்தப் பதவியில் அவர் ஆழ ஊடுறுவ சில மாதங்கள் ஆகும். ஆனால் இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால், அது அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி விடலாம் என்றார்.
அதேபோல டிஜிபி அந்தஸ்தில் ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி கூறுகையில், நிர்வாகத்தை ஸ்திரமாக வைத்திருக்க இப்படி செய்வது வழக்கம்தான். அனைத்து அரசியல் கட்சிகளும் இப்படித்தான் செய்து வருகின்றன என்றார்.
2001க்கு முன்பு வரை சென்னை கமிஷனர்கள் இப்படி அடிக்கடி பந்தாடப்பட்டதில்லை. 2001க்குப் பிறகுதான் இது அடிக்கடி நடந்து வருகிறது. 2001ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர்தான் கமிஷனர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது தொடங்கியது.
ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன், காளிமுத்துவை மாற்றி விட்டு முத்துக்கருப்பனை கமிஷனராக்கினார். அவரை வைத்து முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் வீட்டை போலீஸார் ரெய்டு செய்த பின்னர் முத்துக்கருப்பன், ஜெயலலிதாவின் விருப்பப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டார். அவரை நீக்கி விட்டு விஜயக்குமார் (மே, 2002) கமிஷனராக்கப்பட்டார்.
விஜயக்குமார் 2003 நவம்பர் வரை அப்பதவியில் நீடித்தார். அவரது காலத்தில்தான் சென்னை நகரில் தொடர்ந்து என்கவுண்டர் மரணங்கள் நிகழ்ந்தன என்பது நினைவிருக்கலாம். பல முக்கிய கிரிமினல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் முக்கியமானது வெங்கடேச பண்ணையார் மரணம். 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து நாடார் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழவே, விஜயக்குமார் மாற்றப்பட்டு, நடராஜ் அப்பதவிக்கு வந்தார்.
ஆனால் ஆறு மாதம் மட்டுமே நடராஜ் அப்பதவியில் இருந்தார். பின்னர் மே 2004ல் நடராஜன் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2004, செப்டம்பர் மாதம் மீண்டும் நடராஜ் கமிஷனரானார். இவர்தான் கடந்த எட்டு ஆண்டுகளில் அதிக காலம் சென்னை கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பத்திரிகைக்கு நடராஜ் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவை புகழ்ந்து கூறியிருந்தார். அது தேரத்ல் காலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளானார். இதையடுத்து நடராஜ் மாற்றப்பட்டார், லத்திகா சரண், 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கமிஷனர் பதவிக்கு வந்தார்.
சென்னை மாநகர வரலாற்றில் ஆணையரான முதல் பெண் அதிகாரி இவர்தான். இடையில் ஜெயலலிதா ஆட்சி போய் கருணாநிதி ஆட்சி வந்தது. இருந்தாலும் லத்திகா சரண் தொடர்ந்து 2007, ஜூலை மாதம் வரை அப்பொறுப்பில் நீடித்தார்.
2007 ஜூலை மாதம் நாஞ்சில் குமரன் கமிஷனராக்கப்பட்டார். இப்பதவியில் அவர் 2008ம் ஆண்டு மே மாதம் வரை நீடித்தார்.
பின்னர் ஆர்.சேகர் கமிஷனர் ஆனார். இவரது பதவிக்காலம் பரபரப்பு மிகுந்ததாக இருந்தது. சைக்கோ கொலைகாரன் காட்டுத்தனமாக கொலை செய்து திரிந்த காலம் இது. இதுதவிர 2008 நவம்பர் மாதம் சட்டக் கல்லூரியில் நடந்த வரலாறு காணாத மாணவர் வன்முறையால் சேகரின் பதவி பறிபோனது.
அவரிடமிருந்து பொறுப்பு ராதாகிருஷ்ணனிடம் வந்தது. இருப்பினும் ராதாகிருஷ்ணனும் ஆறு மாதங்களே இப்பதவியில் நீடிக்க முடிந்தது. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் நடந்த வரலாறு காணாத மோதலால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் ராதாகிருஷ்ணன். உடனடியாக அவரை பதவியிலிருந்து நீக்காவிட்டாலும், அதே காரணத்திற்காகத்தான் இப்போது ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
நேற்று முதல் ராஜேந்திரன் புதிய கமிஷனராகியுள்ளார். இவரும், ராதாகிருஷ்ணனும் ஒரே பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள், மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications